ADDED : ஜூலை 25, 2024 04:52 AM

கொலையில் 5 பேர் கைது
அவனியாபுரம்: தேனி நாராயணன் மகன் மனோஜ் 24. பாட்டி வீட்டில் தங்கி மதுரை மீனாட்சி பஜாரில் கடையில் வேலை பார்த்தார். ஜூலை 21 இரவு அவனியாபுரம் பராசக்தி நகரில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வில்லாபுரம் சாய் கார்த்திக் 24, பொன்மேனி சுபாஷ் 24, செல்வராஜ் 24, பழனிகுமார் 23, ஸ்ரீதர் 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மனோஜ் கடந்த வாரம் மதுக்கடையில் மது அருந்தும் போது சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு பழி தீர்க்க கொலை செய்தது தெரிந்தது.
பெண்ணிடம் நகை பறிப்பு
வாடிப்பட்டி: மதுரை தத்தனேரி மணிகண்டன் 24. நேற்று முன்தினம் இரவு உறவினர் பெண்ணுடன் டூவீலரில் அய்யன்கோட்டைக்கு சென்று திரும்பினார். நகரி டபேதார் சந்தை அருகே டூவீலரில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் மணிகண்டன் மற்றும் பெண்ணை மிரட்டி கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க செயின், ரூ.600ஐ பறித்துச் சென்றனர். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
--டூவீலர் திருடிய சிறுவர்கள் கைது
வாடிப்பட்டி: சொக்கலிங்கபுரம் பாலமுருகன் 27, தனியார் நிறுவன ஊழியர். இவர் நான்குவழி சாலையில் நடந்த பொருட்காட்சியில் ஐஸ்கிரீம் கடை நடத்தினார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, இவரது டூவீலரை காணவில்லை. நிதி நிறுவனத்தினர் எடுத்திருப்பர் என நினைத்தார். நேற்று காலை சோழவந்தானில் இவரது டூவீலரில் சென்ற 2 சிறுவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். சோழவந்தான் பேட்டை, சங்கங்கோட்டை பகுதி 17 வயது சிறுவர்கள் இருவரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.