4 கிலோ கஞ்சா: இருவர் கைது
உசிலம்பட்டி: கீரிப்பட்டியில் எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., அருண் தலைமையில் போலீசார் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூ வீலரில் 4 கிலோ கஞ்சாவுடன் வந்த கீரிப்பட்டி கனிராஜா 52, மதுரை விளாங்குடி செல்லப்பாண்டி 31, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா, டூ வீலர், ரூ. 3,200 ஐயும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
'இடி' தாக்கி பசு பலி
மேலுார்: அ.வல்லாளபட்டியில் நேற்று இரவு 7:00 மணிக்கு இடியுடன் மழை பெய்தது. வீட்டின் முன்பகுதியில் இடி தாக்கிய அதிர்ச்சியில் பத்மாஸ்ரீ 4, முத்துலெட்சுமி 21, பஞ்சு 30, சாவித்திரி 5. உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மூக்கன் என்பவரின் பசுமாடும் இடிதாக்கியதில் இறந்தது. அவருடைய வீட்டில் விரிசல் ஏற்பட்டது. மின்சாதன பொருட்கள் பழுதாயின. வருவாய் துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பு.
டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி
பேரையூர்: மெய்யனுாத்தம்பட்டி துரைப்பாண்டி 45. சரவணகுமார் 34. இருவரும் பேரையூரில் இருந்து டூவீலரில் சாப்டூர் ரோட்டில் சென்றனர். துரைப்பாண்டி ஓட்டிச் சென்றார். கணவாய் பட்டி விலக்கு அருகே சென்ற போது, சாப்டூர் விக்ரம் 24, எதிரே டூவீலரில் வந்தவர் மோதினார். (மூவரும் ஹெல்மெட் அணியவில்லை) இதில் துரைப்பாண்டி இறந்தார். சரவணகுமார், விக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
நகைகள் திருட்டு: 3 பேர் கைது
மதுரை: அண்ணாநகர் கோமதிபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் 59. காரைக்குடி அழகப்பா கலைக் கல்லுாரியில் நிதி அலுவலர். சம்பவத்தன்று குடும்பத்துடன் மேல்மருவத்துார் செல்ல இருந்தனர். பீரோவில் இருந்த நகைகளை எடுக்க திறந்தபோது, அங்கிருந்த 19 பவுன் நகைகள் மாயமானது தெரிந்தது. அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் கோமதிபுரம் மணிசரவணன் 28, செந்தில்குமார் 21, முத்துமணி 40 ஆகியோர் வீடுபுகுந்து திருடியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தாயை கொன்ற மகன் கைது
மதுரை: விராதனுார் சத்யாநகர் போஸ். இவருடைய மனைவி சரோஜா 60. இவர்களின் மகன் மணிகண்டன் 41. கொத்தனார். சரோஜா பெயரில் உள்ள இடத்தை தனக்கு எழுதித்தர வலியுறுத்திய நிலையில் மறுப்பு தெரிவித்ததால் ஆக.3 ல் அவரை மணிகண்டன் தாக்கினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று காலை இறந்தார். சிலைமான் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.