ADDED : பிப் 27, 2025 01:42 AM
தங்கம் அபேஸ்
வாடிப்பட்டி: இவ்வூர் மெயின்ரோட்டில் சேதுவளவன் 55, நகை கடை வைத்துள்ளார். பிப்.15ல் இவரது கடைக்கு வந்த ஜோடி அடகு வைத்து திருப்பிய 5 பவுன் நகைக்கு பதில் புதிய நகை கேட்டனர். கூடுதலாக ரூ.26 ஆயிரம் கொடுத்து புதிய நகை வாங்கினர். நேற்று அந்த நகையை உருக்கிய போது போலி என தெரிந்தது. வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
எட்டு கிலோ கஞ்சா பறிமுதல்
திருமங்கலம்: மதுவிலக்கு போலீசார் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் தலைமையில் சிந்துபட்டி, உசிலம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பாண்டிபட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கையில் கையில் மூடையோடு சுற்றிய அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி 35, பாலகிருஷ்ணன் 33, மூவேந்தரன் 30, கார்த்திக் 28, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் விற்பனைக்காக கஞ்சா கடத்தியது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் திருட்டு: மூவர் கைது
வாடிப்பட்டி: குலசேகரன்கோட்டை பரமன் 37, இவர் சாணாம்பட்டி செக்போஸ்ட் அருகே சுண்ணாம்பு கடை நடத்தி வருகிறார். அங்கிருந்த போர்வெல் மோட்டார் திருடு போனது. எஸ்.ஐ.,துரைமுருகன் மற்றும் போலீசார் விசாரித்து திருடிய சாணாம்பட்டி சந்திரபோஸ் 49, சந்தனபாண்டி 19, திருட்டு மோட்டார் வாங்கிய இரும்பு கடைக்காரர் ராமு 43, ஆகியோரை கைது செய்தனர்.
மயங்கி விழுந்த ஊழியர் பலி
திருமங்கலம்: உசிலம்பட்டி அருகே வி.பெருமாள் பண்டிகை சேர்ந்த காசிமாயன் 55, சிந்துபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்நிலை எழுத்தராக வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு வந்த அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நாற்காலியில் இருந்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவி இன்பரதி புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.