/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேருக்காகவும், பெருமைக்காகவும் வீட்டில் பிள்ளையாக வளர்க்கப்படும் ரேக்ளா ரேஸ் மாடுகள்: 'அதுதான் கெத்து' என உரிமையாளர்கள் உற்சாகம்
/
பேருக்காகவும், பெருமைக்காகவும் வீட்டில் பிள்ளையாக வளர்க்கப்படும் ரேக்ளா ரேஸ் மாடுகள்: 'அதுதான் கெத்து' என உரிமையாளர்கள் உற்சாகம்
பேருக்காகவும், பெருமைக்காகவும் வீட்டில் பிள்ளையாக வளர்க்கப்படும் ரேக்ளா ரேஸ் மாடுகள்: 'அதுதான் கெத்து' என உரிமையாளர்கள் உற்சாகம்
பேருக்காகவும், பெருமைக்காகவும் வீட்டில் பிள்ளையாக வளர்க்கப்படும் ரேக்ளா ரேஸ் மாடுகள்: 'அதுதான் கெத்து' என உரிமையாளர்கள் உற்சாகம்
ADDED : ஜூலை 19, 2024 05:59 AM

மதுரை : ஆண்டில் ஆறுமாத சீசனில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றால் சீசனே இல்லாத பந்தய விளையாட்டு ரேக்ளா ரேஸ்கள் தான். ஜோடி நாட்டுமாடுகளை வண்டியில் பூட்டி சாரதி, துணை சாரதியுடன் தார்ச் சாலைகளில் சீறிப்பாயும் மாடுகளை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது. மதுரையில் ரேக்ளா சங்கம் உள்ளது.
இதில் 600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். முழுக்க முழுக்க விளையாட்டின் அடிப்படையில் உருவானது என்றாலும் பரம்பரையாக மாடுகளை வளர்த்து பந்தயத்திற்கு அனுப்புகிறோம் என்றனர் மாடுகளின் உரிமையாளர்கள்.
பெயரும் பெருமையும் முக்கியம்
ஜவஹர், பரவை: பரவையில் சோனைமுத்து என தாத்தா பெயரில் தான் அந்த காலத்தில் இருந்து ரேக்ளா ரேஸ் போட்டிக்கு மாடுகளை அழைத்துச் செல்கிறோம். எங்களிடம் 5 ஜோடி மாடுகள் உள்ளன. வயலில் மண்ணை உழவோட்டச் செய்வது, நீச்சல் பயிற்சி தருவதுடன் சத்தான உணவுகளையும் கொடுக்க வேண்டும். பந்தயத்தில் ஜெயித்தால் லாபம் கிடையாது. பெயரும் பெருமையும் தான். அதற்காக தான் மாடுகளை வளர்க்கிறோம்.
வெற்றி திசைமாறிப் போகும்
சமர்ஜித், வெள்ளரிபட்டி:
தாத்தா போஸ், அப்பா பிரஸ்னேவ், அடுத்து நான் என 3 தலைமுறையாக பந்தய மாடுகளை வளர்க்கிறோம். ஜல்லிக்கட்டில் மாடுகளை வாடியில் அவிழ்த்து விடும் போது ஒருமுறை தான் உரிமையாளரின் பெயரை சொல்வார்கள். இங்கே மாடுகள் ஓடும் போது குறிப்பாக முதல் மூன்று இடங்களில் செல்லும் போது தொடர்ந்து நமது பெயரை உச்சரிப்பார்கள். அதுதான் கெத்து. எங்கள் வீட்டில் 3 ஜோடி மாடுகள் இருந்தாலும் தற்போது ஒரு ஜோடியைத் தான் பந்தயத்திற்கு அனுப்புகிறேன். ஜல்லிக்கட்டு போட்டியைப் போல மாடு கண்டிப்பாக ஜெயிக்கும் என பந்தயம் கட்டமுடியாது. மழை பெய்தாலோ, வண்டியில் ஏதாவது ஆணி, மறை கழன்றாலோ, துணை சாரதி கீழே விழுந்தாலோ, மாட்டின் கால் குளம்பில் இருந்து லாபம் கழன்றாலோ வெற்றி திசைமாறிப் போகும். அதையும் தாண்டி ஜெயித்தால் கிடைக்கும் பெயர் தான் எங்களுக்கு கவுரவம். பரம்பரையாக மாடுகளை பிள்ளைகளைப் போல வளர்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பழகிய மாடுகள் தான் பந்தயத்திற்கு
முகமது ஹனீபா, வண்டி சாரதி: 40 ஆண்டுகளாக ரேக்ளா வண்டி ஓட்டுகிறேன். மாடுகளை தயார் செய்வது தான் மிகப்பெரிய வேலை. 2 பற்களுடன் குறைந்தது 3 வயதுள்ள நாட்டுமாடுகள் ரேக்ளா வண்டிக்கு ஏற்றது. வயலில் தனியாக இடம் ஒதுக்கி ஒருநாள் விட்டு ஒருநாள் இரண்டு மணி நேரம் உழவோட்ட பயிற்சி தருவோம். இதன் மூலம் கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். பால், முட்டை, கானப்பயறு, சுண்டல், கோதுமை, கேழ்வரகு, பேரீச்சை, பருத்தி விதைகளை உணவாக கொடுப்போம்.
நம்மிடம் பழகிய மாடுகள் தான் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படுத்த முடியும். போட்டி நடப்பதற்கு ஒருவாரம் முன்பு சுடுநீரில் யூக்லிப்டஸ் இலைகளைச் சேர்த்து கொதிக்கவைத்து வெதுவெதுப்பான பின் அதில் குளிக்கவைப்போம். இப்படிச் செய்தால் கால் சோர்வு வராது. 15 கி.மீ., துாரத்திற்கு மாடுகள் மூச்சிரைக்காமல் ஓடும். வீலி இலை, முடக்கத்தான் இலைச் சாறெடுத்து பாலில் கலந்து கொடுத்தால் அதன் மூட்டுகளுக்கு நல்லது. போட்டியின் போது இருமாடுகளும் சீராக ஓட வேண்டும்.
வெற்றிக் கோட்டை தொடும் போது மாடுகளின் இதயமும் எங்கள் இதயமும் ஒன்றாக துடிக்கும். ஜெயிக்காவிட்டாலும் அவைகள் எங்கள் பிள்ளைகள் தான் என்றார்.