/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருவாய்த்துறை செயலர் ஆஜர்
/
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருவாய்த்துறை செயலர் ஆஜர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருவாய்த்துறை செயலர் ஆஜர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருவாய்த்துறை செயலர் ஆஜர்
ADDED : மார் 06, 2025 03:22 AM
மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார்.
துாத்துக்குடியில் தாசில்தாராக பணிபுரிந்தவர் செல்வநாயகம். இவர் 2024 மே 31ல் பணி ஓய்வு வயதை அடைந்தார். தகுதியற்ற சிலருக்கு இலவச பட்டா வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மே 30 ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை ரத்து செய்து ஓய்வு பெற அனுமதித்து பணப் பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் செல்வநாயகம் மனு செய்தார். இதை அனுமதித்த தனிநீதிபதி, 'சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை பணி ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும். பணப்பலன்களை வழங்க வேண்டும்,' என வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து வருவாய்த்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
செல்வநாயகம், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.அமுதா ஆஜரானார்.
நீதிபதி: நீதிமன்ற உத்தரவை குறித்த காலத்தில் அதிகாரிகள் நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன. கல்வித்துறைக்கு எதிராகத்தான் அதிக அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன. நீதிமன்ற உத்தரவை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென கலெக்டர்களுக்கு 2023 ல் தலைமைச் செயலர் சுற்றறிக்கை வெளியிட்டார். இதை எத்தனை அதிகாரிகள் பின்பற்றுகின்றனர். நீதிமன்ற உத்தரவிற்கு அதிகாரிகள் மதிப்பளிப்பதில்லை. நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டித்தால்தான் தீர்வு கிடைக்கும்.
அரசு தரப்பு: இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவு பகுதியளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. மனுதாரருக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. முதல்நிலை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மனுதாரருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடக்கிறது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தீவிரமானது. நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற அவகாசம் தேவை.இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி விசாரணையை ஏப்.,2 க்கு ஒத்திவைத்தார். அன்று இவ்வழக்கில் அமுதா ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டார்.