ADDED : செப் 03, 2024 05:50 AM
கண்தானம் விழிப்புணர்வு
மதுரை: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம், அரசு மருத்துவமனை சார்பில் கண் தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் வானதி தலைமையில் நடந்தது. உதவி பேராசிரியர் ராஜேஸ்வரி, கண் பார்வையிழப்பு காரணங்கள், கண் பிரச்னைகள், தீர்வுகள் குறித்து விளக்கினார். டாக்டர்கள் லாவண்யா, சுகந்தி பங்கேற்றனர். திட்ட அலுவலர்கள் பூமாதேவி, ரேணுகா, உஷா, புவனேஸ்வரி ஒருங்கிணைத்தனர்.
--துவக்க விழா
மேலுார்: தெற்குத்தெரு வைகை பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது. அறிவியல் மற்றும் மனிதநேயத்துறை தலைவர் புவனமாரிதாசன் வரவேற்றார். முதல்வர் சிவரஞ்சனி தலைமை வகித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கணிதத்துறை பேராசிரியர் முத்துவேல் நன்றி கூறினார்.
நிர்வாகிகள் தேர்வு
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாயத்மனந்த முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். புதிய தலைவராக சத்திய நாராயணன்,செயலாளராக தீனதயாளன், துணைத் தலைவர்களாக திருலோகநாதன், சுரேஷ்கண்ணன், துணைச் செயலாளர்களாக சாய் சுகுமாறன், கோபி தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை குருகுல ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பேராசிரியர்கள் பிரேமானந்தம், கார்த்திகேயன், மாரிமுத்து, காமாட்சி, தர்மானந்தம் செய்திருந்தனர்.
மேலாண்மை குழுக்கூட்டம்
திருப்பரங்குன்றம்: தென்பழஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் அன்புமொழி தலைமை வகித்தார். ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசிந்தா நவீன் பேசினார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக நித்யா, துணைத் தலைவராக சந்திரலேகா, உறுப்பினர்களாக சிவராமன், மணிகண்டன் உட்பட 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் மாலதி நன்றி கூறினார்.
அலங்காநல்லுார்: வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆசிரியர் பிரதிநிதி முத்துமாரி, தேர்வு குழு பார்வையாளர் ரமேஷ் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழுத் தலைவியாக மணிமேகலை, துணைத் தலைவராக லதா உட்பட 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நீட் தேர்வு: மாணவிக்கு பாராட்டு
மதுரை: 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வான எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவி பவித்ராவிற்கு தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். தேர்வின் வெற்றி குறித்து பவித்ரா பேசினார். மாணவியின் பெற்றோர் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியை அகிலா நன்றி கூறினார்.
புத்தக ஆய்வு விழா
மதுரை: பாத்திமா கல்லுாரியில் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சார்பில் மாணவிகள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் புத்தக ஆய்வு விழா முதல்வர் செலின் சகாய மேரி தலைமையில் நடந்தது. நுாலாசிரியர்கள் நிக்கோலஸ் பிரான்சிஸ், ரத்னா ஆகியோர் நுாலில் குறிப்பிடப்பட்டுள்ள நுட்பங்களை மாணவிகளுக்கு விளக்கினர். மாணவிகள் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உதவி பேராசிரியை பிரியதர்ஷினி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.
விருது வழங்கும் விழா
மதுரை: புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் மதுரை நகைச்சுவை மன்றம் சார்பில் 'அறம் ஆசிரியர்' விருது வழங்கும் விழா மன்ற அமைப்பு செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது. பராசக்தி கல்வி குழுமத் தலைவர் ஜெகதீசன், ஆசிரியர் மீனாட்சிசுந்தரம், தலைமையாசிரியர் ஷேக்நபி பேசினர். உதவி தலைமையாசிரியர் ரகமத்துல்லா, ஆசிரியர் தவுபிக் ராஜா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மோசஸ், ஜென்சி மரியகவின், இஸ்மத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எஸ்.எம்.சி., குழு தேர்வு
மதுரை: கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி.,நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி.,) புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜவடிவேல் வரவேற்றார். எஸ்.எம்.சி., தலைவராக தஸ்லிம் பானு, துணை தலைவராக நாகலட்சுமி, முன்னாள் மாணவர் முகமது காமில், ஐ.டி.கே., தன்னார்வலர் காளீஸ்வரி உட்பட 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, துணைத் தலைவர் முருகேஸ்வரி பங்கேற்றனர். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.
* மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய எஸ்.எம்.சி., குழு உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. தலைவராக பரமேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் என 24 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். கவுன்சிலர்கள் பானு, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடற்பயிற்சி சங்கம் துவக்கம்
மதுரை: லேடி டோக் கல்லுாரியில் உடற்கல்வி துறை சார்பில் நலவாழ்வு, உடற்பயிற்சி சங்கம் துவக்க விழா முதல்வர் பியுலா ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. சங்கத் தலைவராக பத்மா பிரதிபா, துணைத் தலைவராக சமிக் ஷா, செயலாளராக பேச்சியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 'ஆரோக்கியமான முதுகெலும்பு' என்ற தலைப்பில் டாக்டர் ராஜேஷ் பேசினார். உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தாமீனா, ஹேமலதா ஒருங்கிணைத்தனர்.
குறுவட்ட போட்டிகள்
மதுரை: மேலுார் கல்வி மாவட்டம் சார்பில் சமயநல்லுார் குறுவட்ட விளையாட்டு போட்டிகளை தனபால் மேல்நிலைப் பள்ளி ஏற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடத்தியது. டி.இ.ஓ., இந்திரா தலைமை வகித்தார். தாளாளர் தனபால் ஜெயராஜ், தலைமையாசிரியர் தினேஷ் சேவியர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சாமிதுரை ஒலிம்பிக் கொடியேற்றினார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்பாபு ஏற்பாடு செய்தார்.