/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
120 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைது
/
120 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைது
ADDED : ஆக 04, 2024 05:56 AM

மதுரை : ஆந்திராவிலிருந்து சரக்கு லாரி மூலமாக 120 கிலோ கஞ்சா கடத்திய 7 பேரை மதுரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., சிவசங்கரன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். கடத்தல் லாரி முன்பாக 'எஸ்கார்ட்' போல காரில் சென்று மாவட்ட வாரியாக கஞ்சா சப்ளை செய்ததும் அம்பலமானது.
ஆந்திர மாநிலம் அனாகப்பள்ளி பகுதியில் இருந்து சரக்கு லாரி மூலம் மதுரை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். காரை பின் தொடர்ந்து வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது 120 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. ஆந்திராவில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி செல்லும் போது, சின்ன உடைப்பு பகுதியில் கஞ்சாவை வாங்க காத்திருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.கஞ்சாவுடன் வரும் லாரியின் முன் எஸ்கார்ட் போல காரில் சென்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் கஞ்சாவை வியாபாரிகளுக்கு டெலிவரி செய்தது தெரிந்தது. இதனையடுத்து கஞ்சா, லாரி, கார், 5 அலைபேசிகளை பறிமுதல் செய்த போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கஞ்சா கடத்தியதாக சேலம் பெரியசாமி 52, முகமதுயூனுாஸ் 43, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பிரதீப்குமார் 31, ஊத்தங்கரை பாஸ்கர் 27, திருப்பூர் பிரதீப் 44, நெல்லை மாவட்டம் வி.எம் சத்திரம் ஜெயராஜ்பாண்டியன் 41, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மாரியப்பன் 36, ஆகிய 7 பேரை கைது செய்தனர்.