ADDED : ஏப் 30, 2024 05:21 AM
மதுரை: தன்னை அறியும் அறிவே உயர்ஞானமாகும் என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.
சின்மயா மிஷன் மற்றும் தாம்பிராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட் சார்பாக திருமந்திரம் தொடர் சொற்பொழிவு நடந்தது.
அதில் சிவயோகானந்தா பேசியது: திருமந்திரத்தில் அறிவுதயம் என்னும் பகுதியில் சிவஞானம் பெறுவதின் முக்கியத்துவத்தினை திருமூலர் பாடியுள்ளர். சிவனை வணங்குவது, வழிபடுவது, சிவனிடத்தில் பிரார்த்திப்பதோடு நம்முள் இருக்கும் சிவ தத்துவத்தினை உணர முற்பட வேண்டும்.
உடலும், உலக விஷயங்களும் தற்காலிகமாக இன்பத்தைக் கொடுப்பவை. தன்னை அறியும் அறிவே உயர்ஞானமாகும். அந்த ஞானத்தை குரு உபதேசங்களின் மூலம் பெற்று தன்னுள் இருக்கும் கடவுளை அறிய தனக்கொரு கேடில்லை என்று கூறுகின்றார்.
உலக அறிவைக் காட்டிலும் மிக நுட்பமானது இறைஞானம். ஞானத்திற்கு உள்ளத்தூய்மை முக்கியமாகும். அத் தூய்மையானது மறைநூல்களை கேட்டல், படித்தல், சிந்தித்தல் மற்றும் கடவுளை தியானிப்பதன் மூலம் கைகூடும்.இவ்வாறு பேசினார்.
ஏற்பாடுகளை சேர்மன் வி.ஜெகநாதன் மேனேஜிங் டிரஸ்டி சீனிவாசன், டிரஸ்டிகள் கணபதிநரசிம்மன், ராமன், ஸ்ரீகுமார், சசிராமன், ஜெயஸ்ரீ, குருராஜன் செய்திருந்தனர். இந்த சொற்பொழிவு மே 1 வரை நடக்கிறது.

