/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் செல்லுார் ராஜூ வலியுறுத்தல்
/
மாநகராட்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் செல்லுார் ராஜூ வலியுறுத்தல்
மாநகராட்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் செல்லுார் ராஜூ வலியுறுத்தல்
மாநகராட்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் செல்லுார் ராஜூ வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2024 05:02 AM

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என கமிஷனர் தினேஷ்குமாரிடம் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வலியுறுத்தி மனு அளித்தார்.
மதுரையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது, குண்டும் குழியுமான ரோடுகளை சீரமைப்பது, அனைத்து வார்டுகளிலும் சீராக குடிநீர் வழங்குவது, நாய், மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் செல்லுார் ராஜூ கமிஷனரை சந்தித்தார்.
வார்டு வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த மனுக்களையும் கமிஷனரிடம் கவுன்சிலர்கள் அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செல்லுார் ராஜூ கூறியதாவது: மக்கள் பிரச்னைகளை புரிந்துகொள்பவர் கமிஷனராக உள்ளார். பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 82 மேல்நிலை தொட்டிகள் மூலம் 100 வார்டுகளுக்கும் வினியோகம் செய்யப்படவுள்ளது. அப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினோம். டிசம்பருக்குள் முடியும் என உறுதியளித்துள்ளார்.
மழை நீர் செல்லும் கால்வாய்களை துார்வார வலியுறுத்தியுள்ளோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.748 கோடியில் புறநகர் பாதாளச் சாக்கடை வசதி செய்யப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் கொண்டு வந்தோம்.
மாநகராட்சியை அழகுபடுத்தியதும் எங்கள் ஆட்சியில் தான். மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் வருவதில்லை. கட்சிக் கூட்டம் தான் அவர்களுக்கு முக்கியம் என நினைக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி., வெங்கடேசன் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி மேயருக்கு எதிராக அரசியல் செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி வளர்கிறது என்கிறார். எங்கே என்றுதான் தெரியவில்லை.
வார்டுகள் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் ரூ.ஆயிரம் கோடி சிறப்பு நிதி பெற மேயர், கமிஷனர் முயற்சிக்க வேண்டும் என்றார்.