ADDED : ஏப் 01, 2024 05:44 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றுவோருக்கான தபால் ஓட்டுகள் அதற்கான 'செயலி' மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
தேர்தலில் ராணுவ வீரர்களும் தபால் ஓட்டளிக்க 'எலக்ட்ரானிக்ஸ் டிரான்ஸ்மீட்டர்டு போஸ்டல் பேலட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' (E.T.P.P.M.S.) எனும் செயலியை தேர்தல் கமிஷன் உருவாக்கி உள்ளது. அதில் அந்தந்த தொகுதியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர்கள், ராணுவ வீரர்களுக்கான ஓட்டுச் சீட்டை 'பதிவேற்றம்' செய்வர்.
அந்த போர்டலில் ராணுவ அதிகாரிகள் ஓட்டுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அதனை தனது பகுதியில் உள்ள முப்படை வீரர்களுக்கும் ஓட்டுச்சீட்டாக வழங்க முடியும். அதில் ஓட்டுக்களை பதிவு செய்து ராணுவ வீரர்கள் சீட்டை அனுப்புவர். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர்கள்
அதேபோல தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 12 டி எனும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்குவர். அவர்களுக்கு ஏப்.,7 ல் நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் பணிக்கான பயிற்சியின் போது ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும். அவர்கள் அதில் ஓட்டைப் பதிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். அதேபோல முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த தபால் ஓட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொடர்பு அலுவலரிடம் (சர்வே துறை உதவி இயக்குனர்) தொடர்பு கொண்டு தபால் ஓட்டுக்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

