/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறுந்தானிய சாகுபடிக்கும் மண் பரிசோதனை அவசியம்
/
குறுந்தானிய சாகுபடிக்கும் மண் பரிசோதனை அவசியம்
ADDED : ஜூன் 27, 2024 04:59 AM
மதுரை: கள்ளிக்குடி செங்கப்படையில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, சமச்சீர் உர பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி நடந்தது.
வேளாண் துறை, அட்மா திட்டம் இதற்கான ஏற்பாடுகளை செய்தன. குறுந்தானிய சாகுபடி குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் துணை இயக்குநர் அமுதன் பேசியதாவது:
கள்ளிக்குடியில் குறு, சிறுதானியங்கள், பருத்தி சாகுபடி நடக்கிறது. குறைந்த தண்ணீர், குறைந்த உர பயன்பாட்டில் குறுந்தானியங்களை சாகுபடி செய்யலாம். ஆனால் சரியான அளவில் உரமிடுவதன் மூலம் பயிர்களின் மகசூலை அதிகரிக்கலாம். இதற்கு மண் பரிசோதனை செய்வது அவசியம் என்றார்.
இயற்கை விவசாயி சுப்புலட்சுமி இயற்கை இடுபொருள் தயாரிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். உதவி இயக்குநர் சந்திரகலா அரசு வழங்கும் விவசாய திட்டங்களையும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் சக்திகணேசன் உரங்களில் உள்ள சத்துகள் பற்றியும் விளக்கினர்.
துணை இயக்குநர் (ஓய்வு) பூவலிங்கம், வேளாண் அலுவலர்கள் முத்துலட்சுமி, செண்பகம், சோபனா, அமீனாம்மாள், கீதா, துணை வேளாண் அலுவலர் குமாரிலட்சுமி கலந்து கொண்டனர்.
நடமாடும் மண் பரிசோதனை வேன் மூலம் பயிற்சிக்கு வந்த விவசாயிகளின் நிலங்களில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டு அதிலுள்ள சத்துகளின் விவரம் தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் கருப்பசாமி, நாகமோகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் யுவராஜ் குமரன், ஒருங்கிணைப்பாளர் சாந்தி ப்ரியா, ராஜமுனியாண்டி செய்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி நன்றி கூறினார்.