/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளையாட்டு வினையாகக்கூடாது: ரேஸ்கோர்ஸ் மைதானத்தை பராமரித்தும் பயனில்லை
/
விளையாட்டு வினையாகக்கூடாது: ரேஸ்கோர்ஸ் மைதானத்தை பராமரித்தும் பயனில்லை
விளையாட்டு வினையாகக்கூடாது: ரேஸ்கோர்ஸ் மைதானத்தை பராமரித்தும் பயனில்லை
விளையாட்டு வினையாகக்கூடாது: ரேஸ்கோர்ஸ் மைதானத்தை பராமரித்தும் பயனில்லை
ADDED : ஏப் 24, 2024 06:26 AM

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை ஒட்டி பூட்டி கிடக்கும் இளையோர் விடுதிக்குள் இருந்து கிழிந்த கம்பி வேலி வழியாக மைதானத்திற்குள் பாம்புகள் சரளமாக வந்து செல்கின்றன.
ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு சொந்தமான இடத்தில் மத்திய அரசின் இளையோர் விடுதி கட்டப்பட்டு நேரு யுவகேந்திரா மூலம் குறைந்த செலவில் வாடகைக்கு விடப்பட்டது. 'டார்மெட்ரி' அறையில் 80 பேரும் தனியறையில் 20 பேரும் தங்கும் வசதி இருந்தது. பத்தாண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாததால் கட்டடம் பழுதடைந்து விடுதிக்குள் மழைநீர் ஒழுகியது. தண்ணீரும் இல்லாததால் மூன்றாண்டுகளுக்கு முன் நிரந்தரமாக பூட்டப்பட்டது.
அப்போதிருந்து இளையோர் விடுதியின் முன்புற வளாகத்தில் புதர்மண்டி காடாக மாறியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கட்டடத்தை ஒப்படைத்தால் அதை பராமரித்து மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் போது வெளிமாநில, மாவட்ட வீரர், வீராங்கனைகள் குறைந்த செலவில் தங்குவதற்கு பயன்படுத்தலாம். அதையும் செய்யவில்லை.
ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் டென்னிஸ் கோர்ட், ஜிம்னாஸ்டிக் அரங்கின் பின்புறம் கம்பி வேலி மூலமாக இளையோர் விடுதி பிரிக்கப்பட்டுள்ளது.
கம்பிவேலியில் ஆங்காங்கே மனிதர்கள் உள்ளே நுழையும் அளவுக்கு பெரிய அளவில் ஓட்டையாக உள்ளது. ரேஸ்கோர்ஸ் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்பட்டாலும் கம்பிவேலி வழியாக பாம்புகள் அதிகாலையிலும் மாலையிலும் வளாகத்திற்குள் படையெடுக்கின்றன. குறிப்பாக டென்னிஸ், ஜிம்னாஸ்டிக், வாலிபால் பயிற்சி பெற வரும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆபத்தாக உள்ளன.
இளையோர் விடுதிக்குள் உள்ள புதரை அப்புறப்படுத்தி மீண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைத்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

