ADDED : மே 05, 2024 03:34 AM
மதுரை : வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வயல்களில் பயிர்கள் கருகுவதை தடுக்க மூடாக்கு இட வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், திருமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் ஞானவேல் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: விதைப்பதற்கு முன்பு 100 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பொட்டாசியம் குளோரைடு கலந்து அக்கரைசலில் விதைகளை 16 மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்கலாம். பயிர்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் சோளத்தட்டை, கரும்புத்தட்டை, வைக்கோல் போன்றவற்றால் மூடுவதன் மூலம் மண்ணில் உள்ள ஈரம் விரைவில் ஆவியாவதை தடுக்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி சைக்கோசெல் மருந்தை கலந்து தெளிக்கலாம். களிமண் வகையை சேர்ந்த கயோலினைட் என்ற பொருளை 100 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ அளவில் கலந்து தெளிக்கலாம். அல்லது 100 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பொட்டாசியம் குளோரைடு மருந்து கலந்து தெளிப்பதன் மூலம் பயிர்களை வறட்சியில் இருந்து ஓரளவு காப்பாற்றலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 10 முதல் 20 மில்லி அளவு பி.பி.எப்.எம்., என்ற மெதிலோபாக்டீரியம் வகை திரவ நுண்ணுயிரை கலந்து விதைநேர்த்தி செய்யலாம். இது வளர்சிதை மாற்றவினை மூலம் பயிரின் வறட்சி தாங்கும் திறனை அதிகரிக்கும். அல்லது காலை, மாலை வேளையில் இலைகள் நன்கு நனையும் படி தெளிக்கலாம் என்றனர்.