/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இ-சேவை மைய சர்வருக்கு மீண்டும் கைரேகை பதிவு முறையால் அவதி
/
இ-சேவை மைய சர்வருக்கு மீண்டும் கைரேகை பதிவு முறையால் அவதி
இ-சேவை மைய சர்வருக்கு மீண்டும் கைரேகை பதிவு முறையால் அவதி
இ-சேவை மைய சர்வருக்கு மீண்டும் கைரேகை பதிவு முறையால் அவதி
ADDED : மே 08, 2024 04:48 AM
திருமங்கலம், : தமிழ்நாடு அரசு இணையதளங்கள் மூலம் பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு தனியார், அரசு இ-சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் இம்மையங்கள் மூலம் வருமானம், ஜாதி, இருப்பிடம் உள்பட அனைத்து சான்றிதழ்களுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.
இ-சேவை மையங்கள் வந்த புதிதில் அதன் 'சர்வர்'-க்குள் செல்ல தனியார் மையங்களுக்கும், அரசு இ-சேவை மையத்திற்கும் வழங்கப்பட்ட ஐ.டி.,யை பதிவு செய்து கைரேகை வைத்தால் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் ஒவ்வொரு முறை உள்ளே செல்லும்போதும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஒரு முறை உள்ளே சென்று பதிவு செய்யும் போதே நேரம் கடந்து விட்டால் சர்வரை விட்டு வெளியே வந்துவிடும். இதனால் சான்றிதழ்களை முழுமையாக பதிவு செய்வதில் சிக்கல் இருந்தது.
பெரும்பாலான தனியார் இ-சேவை மையங்களில் உரிமையாளர் இன்றி, ஊழியரே இருப்பர். அவர்களால் சர்வர்க்குள் செல்ல இயலாததால் சான்றிதழ் பதிவுக்கு வருவோர் அவதிப்பட்டனர். இதற்கு தீர்வாக கைரேகை பதிவு இன்றி நேரடியாக சான்றிதழ் பதிவு செய்யும் சர்வர்க்குள் செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால் நேற்று முதல் மீண்டும் கைரேகை பதிவு இருந்தால்தான் சர்வருக்குள் செல்லும் வகையில் சாப்ட்வேர்களில் மாற்றம் செய்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லுாரிகள், மேல் படிப்புகளுக்காக விண்ணப்பிப்போருக்கு அனைத்து சான்றிதழ்களும் தேவைப்படும்.
ஆனால் நேற்று முதல் கைரேகை பதிவு என்றதால் சான்றிதழ்களை பதிவு செய்ய இயலாமல் இ-சேவை மைய உரிமையாளர்கள் ஆப்பரேட்டர்கள் தவிக்கின்றனர். எனவே கைரேகை பதிவு இன்றி செயல்பட மின் ஆளுமை முகமை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

