ADDED : மே 18, 2024 04:58 AM
மதுரை, : துவரிமான் இந்திரா காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பெயர்ந்துள்ளதால் குடிநீர் பிடிக்க முடியவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கூறியதாவது:
மூன்றாண்டுகளுக்கு முன் இந்திரா காலனி, கீழத்தெரு, மேலத்தெரு, அக்ரஹாரத் தெருக்களில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன.
இந்திரா காலனி தவிர மற்ற தெருக்களில் தரைக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு வீட்டு வாசல் முன்பாக சிமென்ட் திண்டு, குழாய்க்கான சிமென்ட் மேடை அமைக்கப்பட்டு இரும்பு குழாய்கள்பொருத்தப்பட்டன.
இங்கு மட்டும் இரும்பு பைப்கள் தெருவின் மேல்பகுதியில் வைக்கப்பட்டதால் வேகத்தடை போல உள்ளது. மெயின் குழாயில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பி.வி.சி., குழாய்கள் உடைந்துள்ளதால் மெயின் குழாயில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி வீணாகிறது. இதை பிடிக்க முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர். குழாய்களை சரிசெய்து பொருத்த வேண்டும் என்றார்.

