/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் செயல்படாத சித்த மருத்துவ கவுன்சில் மாணவர்கள் தவிப்பு; போலிகள் அதிகரிப்பு
/
தமிழகத்தில் செயல்படாத சித்த மருத்துவ கவுன்சில் மாணவர்கள் தவிப்பு; போலிகள் அதிகரிப்பு
தமிழகத்தில் செயல்படாத சித்த மருத்துவ கவுன்சில் மாணவர்கள் தவிப்பு; போலிகள் அதிகரிப்பு
தமிழகத்தில் செயல்படாத சித்த மருத்துவ கவுன்சில் மாணவர்கள் தவிப்பு; போலிகள் அதிகரிப்பு
ADDED : ஜூலை 16, 2024 04:59 AM
மதுரை : போலி சித்தா டாக்டர்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலும் அதற்கான இணையதளமும் முழுமையாக செயல்படவில்லை என தமிழ்நாடு சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சங்கத்தலைவர் டாக்டர் ஜெயவெங்கடேஷ் மதுரையில் கூறியதாவது: மாநில சித்த மருத்துவ கவுன்சில் 1997ல் ஏற்படுத்தப்பட்டது. சுகாதாரத்துறை செயலர், இந்திய மருத்துவத்துறை இயக்குநர், அரசு சித்த மருத்துவக் கல்லுாரி முதல்வர்கள், மத்திய சித்த ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநர் ஆகியோருடன் தேர்தல் மூலம் 13 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமலேயே இந்திய மருத்துவத்துறை இயக்குநர் தலைமையில் கவுன்சில் செயல்படுகிறது.
முடங்கிய கவுன்சில்
சித்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவது, புதிய மருத்துவமனை, மருந்தகம் துவங்க அரசுக்கு பரிந்துரைப்பது, புதிய பாடத்திட்டங்களை வெளியிடுவது, சித்த மருந்துகளை தரநிர்ணயம் செய்வது, ஆராய்ச்சி செய்வது உட்பட பல்வேறு பணிகளை கவுன்சில் மூலம் செய்ய வேண்டும். இங்கே கவுன்சிலும் இல்லை, பதிவாளரும் இல்லை. கவுன்சிலுக்கான இணையதளத்திலும் முழுமையான தகவல்கள் இடம்பெறவில்லை.
உலா வரும் போலிகள்
ஹோமியோபதி கவுன்சில், அலோபதி மருத்துவ கவுன்சிலில் டாக்டர்களின் பதிவெண் இடம்பெற்றிருக்கும். சிகிச்சை அளிப்பவர் உண்மையான டாக்டரா, போலியா என்பதை இணையதளத்தில் உள்ள அவரது மருத்துவ பதிவெண் மூலம் கண்டறியலாம். ஆனால் சித்த மருத்துவ இணையதளத்தில் பதிவெண்ணை கண்டறியும் வசதி இல்லாததால் போலிகளை மக்களால் அடையாளம் காணமுடியவில்லை.
மாணவர்கள் அலைக்கழிப்பு
ஹவுஸ் சர்ஜன் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது மருத்துவப் பதிவெண்ணை கவுன்சிலில் தான் பதிவு செய்ய வேண்டும். கவுன்சில் முழுமையாக செயல்பட்டால் ஒரே நாளில் பதிவெண் பெறமுடியும். தற்போது ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால் எல்லோரிடமும் சான்றிதழ் பெற நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையின் கீழ் இயங்கும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் சிறப்பாக செயல்படுகிறது. கவுன்சிலுக்கான டாக்டர்கள் முறைப்படி நியமிக்கப்படுகின்றனர். கேரளா சித்த மருத்துவ கவுன்சிலும் சிறப்பாக செயல்படுகிறது. 16 கல்லுாரிகளைக் கொண்ட சித்த மருத்துவத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தில் மட்டும் சித்த மருத்துவ கவுன்சில் முறைப்படி செயல்படாதது வேதனை அளிக்கிறது. உடனடியாக உறுப்பினர்களை நியமித்து முறைப்படி கவுன்சிலை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

