/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சர் உதயநிதி துறையில் வரிபாக்கி: சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் - எதிர்க்கட்சி தலைவரிடையே மோதல்
/
அமைச்சர் உதயநிதி துறையில் வரிபாக்கி: சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் - எதிர்க்கட்சி தலைவரிடையே மோதல்
அமைச்சர் உதயநிதி துறையில் வரிபாக்கி: சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் - எதிர்க்கட்சி தலைவரிடையே மோதல்
அமைச்சர் உதயநிதி துறையில் வரிபாக்கி: சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் - எதிர்க்கட்சி தலைவரிடையே மோதல்
UPDATED : ஆக 01, 2024 08:20 AM
ADDED : ஆக 01, 2024 05:07 AM

மதுரை: மதுரையில் அமைச்சர் உதயநிதியின் விளையாட்டுத் துறையின் கீழ் உள்ள எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2.68 கோடி வரி பாக்கியை எப்போது செலுத்தும். அதை வசூலிக்க அமைச்சரிடம் மேயர் வலியுறுத்துவாரா என அ.தி.மு.க., கேள்வி எழுப்பியது.
இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும் கேரளா வயநாடுவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின் நடந்த விவாதம்:
வாசுகி, மண்டலம் 1 தலைவர்: பொதுப்பணித்துறை சார்பில் நடக்கும் பாலம் கட்டும் பணிகளால் தண்ணீர் தேங்குகிறது. புதுார் ராமவர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் கால்வாய்களில் மண் தேங்கியுள்ளது. செந்தில்குமரன்நகர் உள்ளிட்ட பகுதியில் வரிசெலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது. கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. மருந்து தெளிக்கும் வண்டி போதிய எண்ணிக்கையில் இல்லை. வார்டு நிதி ஒதுக்கீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.
சரவணபுவனேஸ்வரி, மண்டலம் 2 தலைவர்: பாதாளச் சாக்கடை பிரச்னை உள்ளது. தனியார் அமைப்பு ஆய்வு 80 சதவீதம் முடிந்துள்ளது என்கின்றனர். ஆனால் அதுதொடர்பான எவ்வித தகவலும் இல்லை. 25 வது வார்டில் போர்வெல் மட்டும் அமைக்கப்பட்டு அடுத்த பணிகள் தொடராமல் நிலுவையில் கிடக்கிறது. ஒப்பந்ததாரர்கள் பணிகள் குறித்து எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. சரியாக செயல்படாதவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 7 மாதங்களாக கல்விக் குழு கூட்டம் நடக்காததால் பள்ளிகளில் நடக்க வேண்டிய பணிகள் நிலுவையாக உள்ளது.
கமிஷனர்: பாதாளச் சாக்கடை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆக.,15க்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் பின் அரசு ஒப்புதல், மக்கள் கருத்து கேட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
பாண்டிச்செல்வி, மண்டலம் 3 தலைவர்: பாதாளச்சாக்கடை பிரச்னை அதிகம் உள்ளது. சிறப்பு ஆலோசனை கூட்டம் முடிவுபடி டெண்டர் எப்போது வெளியாகும்.
கமிஷனர்: தனியார் நிறுவன ஆய்வு அறிக்கை பெற்று டிசம்பருக்குள் பணிகளுக்கான டெண்டர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
முகேஷ் சர்மா, மண்டலம் 4 தலைவர்:குடிநீர் சப்ளையில் அதிக குளறுபடி உள்ளது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் உள்ளது. அரசரடியில் இருந்து செய்யப்படும் குடிநீர் சப்ளையில் முறைகேடு நடக்கிறது. வால்வு ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். அம்ரூத் திட்டப் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவதில்லை.
மேயர்: வார்டுக்குள் எந்த பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களிடம் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். பல முறை தெரிவித்தும் ஏன் பின்பற்ற மறுக்குறீர்கள். ஒரு தெருவிளக்கு கூட கவுன்சிலருக்கு தெரியாம மாட்டாதீர்கள்.
சுகிதா, மண்டலம் 5 தலைவர்: அழகப்பன் நகர் ரயில்வே கேட்டால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும். நாவலர் சோமசுந்தரம் பாரதியார் மாநகராட்சி பள்ளி ஒவ்வொரு ஆண்டும் அதிக தேர்ச்சியை பெறுகிறது. லேப் வசதி உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும்.
ஜெயராம் (தி.மு.க.,): ஓராண்டிற்கு மட்டுமே துப்புரவு தொழிலாளர்களுக்கான சீருடை குறித்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான சீருடைகளை வழங்க வேண்டும். தத்தனேரி மயானம் பராமரிப்பு பணிகள் எந்த நிலையில் உள்ளது.
கமிஷனர்: இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. 15 நாட்களில் முடிவுறும்.
ஜெயராம்: தத்தனேரி மயானத்தில் தகனம் செய்ய ரூ.3450 வசூலிக்க முடிவு செய்துள்ளது. இது பிற மாநகராட்சியை விட மிக அதிகம். தமிழக அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் இலவச எரிவாயு தகனம் முறையை மாநகராட்சி அறிவிக்க வேண்டும். இதற்கு 100 கவுன்சிலர்களும் ஆதரவு உள்ளது.
மேயர்: பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
கமிஷனர்: உறுப்பினர் குறிப்பிடுவது விறகு மூலம் தகனம் செய்வது. எல்.பி.ஜி., முறையில் ஒரு சடலத்திற்கு நாகர்கோவில், பெரம்பலுார், ஈரோடு போன்ற மாநகராட்சியில் இதை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கமர்சியல் சிலிண்டர் விலை ரூ.2019. ஒரு சடலம் எரிக்க ஒன்றரை சிலிண்டர் தேவை.
சோலைராஜா, எதிர்க்கட்சி தலைவர் (அ.தி.மு.க.,): மாநகராட்சியில் வீட்டுமனை ஆன்லைன் பதிவு முந்தைய நடைமுறையை விட இருமடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொத்து, குடிநீர், பாதாளச் சாக்கடை என அனைத்தும் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த உயர்வும் மக்களை பாதிக்கும். மறுபரிசீலனை செய்ய வேண்டும். மதுரை நகரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தடுக்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன
நகர்நல அலுவலர்: இதுவரை 20 பேர் பாதித்துள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சோலை ராஜா: சென்னையை போல் தொழில்வரியை மதுரையிலும் உயர்த்த திட்டம் உள்ளதா
மேயர்: இல்லை. நீங்க (அ.தி.மு.க.,) உங்க ஆட்சியில் வரிகளை உயர்த்தவில்லையா.
சோலைராஜா: மக்களை பாதிக்கும் வகையில் வரிகளை உயர்த்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் தான் மதுரை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் இதுவரை ஒரு பைசாவும் சிறப்பு நிதியாக ஒதுக்கவில்லையே. (வாக்குவாதம் தொடரும் சூழ்நிலை ஏற்பட்டதால் கமிஷனர் குறுக்கிட்டார்)
கமிஷனர்: பாதாளச் சாக்கடை விரிவாக்கம், புதிய ரோடுகள், பூங்காக்கள் உள்ளிட்டவை சிறப்பு நிதி மூலம் தான் நடக்கிறது. 3 ஆண்டுகளில் 613 கி.மீ.,க்கு மேல் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோலை ராஜா: ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்கு மாநகராட்சிக்கு ரூ.2.68 கோடி வரி பாக்கி உள்ளது. இது அமைச்சர் உதயநிதியின் விளையாட்டு துறையில் கீழ் உள்ளது. இந்த வரியை வசூலிக்க அவரிடம் மேயர் வலியுறுத்த வேண்டும்.
கமிஷனர்: இதுகுறித்து துறை உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதித்துறை ஒப்புதல் பெற்று இதற்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேயன் (காங்.,): பாதாளச் சாக்கடை பணிகள் மோசமாக நடக்கிறது. ஒப்பந்ததாரர்கள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை. வரிவிதிப்பில் குளறுபடி உள்ளது. மாநகராட்சி பார்க்கில் கூட விளக்குவசதி இல்லை.
விஜயா (மா. கம்யூ.,): தற்காலிக ஆசிரியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்.
சொக்காயி (அ.தி.மு.க.,): கணக்கு குழு செயல்படுகிறதா. அதற்கு தலைவர் யார், உறுப்பினர்கள் யார் என்றே தெரியவில்லை. நிலைக்குழுக்களின் செயல்பாட்டை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.