/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'தெய்வங்கள் கையில் இசைக்கருவிகளே' தமிழிசை சங்க பொன் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
/
'தெய்வங்கள் கையில் இசைக்கருவிகளே' தமிழிசை சங்க பொன் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
'தெய்வங்கள் கையில் இசைக்கருவிகளே' தமிழிசை சங்க பொன் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
'தெய்வங்கள் கையில் இசைக்கருவிகளே' தமிழிசை சங்க பொன் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ADDED : ஆக 06, 2024 12:17 AM

மதுரை:''தமிழ் இசை மீண்டு வந்தது பக்தி மார்க்கத்தில் தான்,'' என, கவிஞர் வைரமுத்து பேசினார்
மதுரை தமிழிசை சங்கத்தின் பொன்விழாவும், ராஜா முத்தையா செட்டியாரின் 120வது பிறந்தநாள் விழாவும் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தன.
தேவகி முத்தையா விளக்கேற்றி துவக்கி வைத்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். சங்கத் தலைவர் முத்தையா செட்டியார் வரவேற்றார்.
விழாவில் கவிஞர் வைரமுத்துவிற்கு, 'முத்தமிழ் பெருங்கவிஞர்' பட்டமும் பொற்கிழியும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். ஆன்மிக சொற்பொழிவாளர் விசாகா ஹரிக்கு தேவகி முத்தையா பொற்கிழி வழங்கினார். பொன்விழா மலரை அமைச்சர் வெளியிட சங்கத் தலைவர் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''தமிழிசைக்கு என்று ஒரு மரபு இருந்தது. இறைவனை வணங்குவதற்கு, இறைவனை போய் சேர்வதற்கு தமிழை கருவியாக பயன்படுத்திய காலம் உண்டு. தமிழிசை எந்த இசைக்கும் சளைத்தது அல்ல,'' என்றார்.
விசாகா ஹரி பேசியதாவது:
இசை என்பது உயிருடன் கலந்த உணர்வு. உதாரணம் நம் இதயத் துடிப்பு. தமிழிசை பழமையானது என்றாலும் புத்துணர்வு கொடுக்கும் அளவிற்கு புதுமையானது. மன ஒருமைப்பாடு, நிம்மதியை அடைய இசை மார்க்கமே சிறந்த வழி.
இசைக்கு மொழி, ஜாதி, மதம் போன்ற தடைகள் இல்லை. இசையானது எல்லோரையும் ஒருங்கிணைக்கவே அன்றி பிரிவினைக்கானது அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
வைரமுத்து பேசியதாவது:
மூன்று நுாற்றாண்டுகள் மட்டும் தான் இசை சங்கத்தில் தமிழிசை இருந்தது. அதன்பின் தமிழிசை மீண்டு வந்தது பக்தி மார்க்கத்தில் தான். பின் தமிழிசையை ஜனரஞ்சகப்படுத்தியது மதுரை தமிழிசைச் சங்கம்.
இச்சங்கம், இதுவரை 30 பேருக்கு இப்பட்டத்தை வழங்கியுள்ளது. அப்போது வராத எதிர்ப்பு வைரமுத்துவிற்கு மட்டும் வருகிறது. நல்லதை நினைத்து பொறாமையை பொசுக்க வேண்டும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு எப்போது தோள் கொடுக்கிறானோ அப்போது தான் தமிழ் சமூகம் உயர்வு பெறும்.
நான் என்னுடைய விருதுகளை விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் எந்த விருதும் எனக்கு சர்ச்சை இல்லாமல் வழங்கப்பட்டதும் இல்லை. நான் செய்ய வேண்டிய விளம்பரத்தை என் தோழர்கள் எனக்காக சொந்த செலவில் செய்கின்றனர்.
முன்பு 'கவியரசு' என்னும் பட்டம் வழங்கிய போது சர்ச்சை எழுந்தது. எனவே அப்பட்டத்தை துறந்தேன். இழப்பவன் தான் அதிகம் பெறுகிறான். கருணாநிதி எனக்கு 'கவிப்பேரரசு' என பட்டம் சூட்டினார். சர்ச்சைக்கு பதில் சொல்லும் நேரத்தில் கவிதை எழுதுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சங்க அறங்காவலர் மோகன்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறங்காவலர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.