sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மலை கிராம மக்களின் தாகம் தீர்க்கும் மதுமஞ்சரி; உயிர்நீர் தரும் ஊர்க்கிணறு

/

மலை கிராம மக்களின் தாகம் தீர்க்கும் மதுமஞ்சரி; உயிர்நீர் தரும் ஊர்க்கிணறு

மலை கிராம மக்களின் தாகம் தீர்க்கும் மதுமஞ்சரி; உயிர்நீர் தரும் ஊர்க்கிணறு

மலை கிராம மக்களின் தாகம் தீர்க்கும் மதுமஞ்சரி; உயிர்நீர் தரும் ஊர்க்கிணறு


ADDED : மார் 08, 2025 08:06 AM

Google News

ADDED : மார் 08, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்லும் பயணம் நீண்ட தொலைவு. பாதை முழுக்க வெளிச்சம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கத் தேவையில்லை. கைகளில் ஏந்தியிருக்கும் சிறு விளக்கின் வெளிச்சம் எவ்வளவு துாரத்தை துலக்கிக் காட்டுகிறதோ அவ்வளவு துாரத்தை முதலில் கடந்தால் அடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வெளிச்சம் இன்னும் சிறு துாரத்தைக் காட்டும். அப்படித் தான் நெடும்பயணம் நிறைவை அடையும், என்கிறார் ஊர்க்கிணறு என்ற அமைப்புடன் இணைந்து மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் வாழும் கிராமப்புறங்களில் கிணறுகளைப் புனரமைத்து, கைவிடப்பட்ட, பாழடைந்த கிணறுகளை மீட்டெடுத்துச் சீரமைத்து உதவி வரும் மதுமஞ்சரி.

இளங்கலை பொருளியல் பட்டதாரியான இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர்.

இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் கிணறுகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அது குறித்த வரைபடங்கள், நிலத்துக்கு நிலம் மாறுபடும் நீரின் தன்மை என எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் அரிய முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மதுமஞ்சரியிடம் பேசிய போது...

இந்த பயணம் தொடங்கியது எப்படி...

பெங்களூரு, சென்னையில் சில நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், கட்டடக்கலை நிறுவனமான அகர்மாவில் பணியாற்றினேன். அங்குதான் 'குக்கூ' சிவராஜ் அறிமுகமானார். அந்தச் சந்திப்பின் முடிவில் என் கையில் 'நெருப்பு தெய்வம்; நீரே வாழ்வு' எனும் புத்தகம் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனார். அந்தப் புத்தகம் யோகி நிகமானந்தாவைப் பற்றியது. ஒரு புதிய தெளிந்த நம்பிக்கை ஒன்றை விடாப்பிடியுடன் தாங்கி நிற்கவல்ல மனநிலைக்கான தொடக்கத்தை அந்தப் புத்தகம் தந்தது.

அன்றைய நாளின் இரவு தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது. நான் பிறந்து வளர்ந்த இந்த சமூகத்தின் மீதிருக்கும் பொறுப்பை நான் துரும்பு அளவாவது ஏற்றுக் கொள்ளும் மனோநிலையையும் அந்த இரவு தான் எனக்குத் தந்திருப்பதாக நம்புகிறேன்.

ஊர்க்கிணறு இயக்கத்தில் முதல் பணி...

ஊராட்சி தேர்தலில் தனக்கு வாக்களிக்காத மக்கள் வாழும் பகுதியில் இருக்கும் குடிநீர் தேக்கத் தொட்டியின் துாண்களை உடைத்துச் சாய்க்கிறார்கள். அப்படி நீராதாரம் இழந்து போன திருவண்ணாமலை அருகிலுள்ள துருவம் காலனியிலிருந்த மண்மூடிய கிணற்றை புனரமைத்துத் தரும் பணிகளை முதலில் துவங்கினேன்.

அதற்கு பிறகு இதுவரையிலும் பதினைந்து கிணறுகளைத் துார்வாரி புனரமைத்துள்ளோம். ஒவ்வொரு கிணறு புனரமைப்பின் போதும் புதிய அனுபவங்களும் புதிய மனிதர்களும் கிடைத்துக் கொண்டே இருந்தார்கள்.

ஒவ்வொரு கிணறும் கசடுகள் அகன்று ஊற்றுக்கண் திறந்த கணங்கள் தான் என் வாழ்வின் நிறைந்த கணங்கள் என நான் நினைக்கிறேன். சமூகம் நோக்கி உள்நகர்வதும் அங்கே இயன்றதைச் செய்வதும் தருவது போன்ற திருப்தி அளிப்பவையாக வேறெதையும் நினைக்கவே முடியவில்லை.

புனரமைக்க வேண்டிய கிணறுகளைத் தேடும்போதுதான் எத்தனை கிணறுகள் அப்படி புனரமைப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறது என புரிந்தது. கிணறு மூடப்பட்டதற்கான காரணம் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரு கிணறு சுதந்திரத்திற்குப் பிறகும் கூட தீண்டாமை காரணமாக மூடப்பட முடியுமா என்று விளங்கவில்லை. 'ஒரு சமூகம் முன்னேறுவதற்கான முதல்படி நீர்' தான் என அங்குதான் தீர்க்கமா முடிவெடுத்தேன்.

மலை கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் அங்கே கிணறுகளுக்கான அவசியமும் என்னவாக இருக்கிறது...

சமவெளிகளைக் காட்டிலும் மலைக்கிராமங்களில் கொடுமையான அளவு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதைப் பார்க்கிறேன். முதலில் மழை பொழியும் இடங்களாகவும், முதலில் ஈரம் சுண்டி வறண்டு போகும் நிலங்களாகவும் மலைக்கிராமங்களின் நிலவமைவு இருக்கின்றன. வெகுசாதாரணமாக 4 கிலோ மீட்டர் துாரம் மேடு பள்ளங்கள் தாண்டி குறைந்த அளவு நீரைச் சுரந்து கொண்டிருக்கும் பள்ளங்களை நம்பியே அவர்களின் அன்றாடம் இருக்கிறது.

அரசின் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நீரே வராத அந்த ஆழ்துளைக் கிணறுகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட காலித் தண்ணீர் தொட்டிகள் அந்த மலைக்கிராமங்களில் பயனற்று நிற்கின்றன. இம்மாதிரியான சூழலில் அந்த நில அமைவுகளுக்கு உகந்தமாதிரி பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கிணறுகளை மீட்டெடுப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகப்பட்டது.

எப்படி இது போன்ற பணிகள் சாத்தியமாகிறது...

மலை கிராமங்களில் இந்த கிணறு புனரமைப்புப் பணி நடப்பது முழுக்க நண்பர்களின் சிறுசிறு பங்களிப்புகளின் மூலமாகத் தான். எவ்வளவோ மனிதர்களின் உயிரும், உழைப்பும் இந்த செயலில் நிறைந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம் சோளகனை பழங்குடியின கிராமத்தில் பணிகளைத் தொடங்கும் முன்னர், அது குறித்து முகநுாலில் பதிவிட்டோம். உடனடியாகவே வெவ்வேறு இடங்களில் இருந்தும் சின்னச் சின்னதாக உதவிகள் வந்துகொண்டே இருந்தன.

ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம் மீட்டெடுக்கும் ஒவ்வொரு கிணற்றின் பின்னாலிருப்பதும் மஞ்சரி எனும் தனிநபரின் உழைப்பு மட்டும் இல்லை.

பல கைகளின் பற்றுதலோடு தான் வரலாற்றின் பெருங்காரியங்கள் இன்றுவரை நடந்தேறி இருக்கின்றன.

இன்னும் முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் கூட்டு நல்லதிர்வு தான் எடுக்கும் எல்லாக் கிணற்றிலும் நன்னீராய் சுரந்து கொண்டிருக்கிறது.

வாழ்த்த 96007 13701

-- தி.ஆறுமுகப்பாண்டி






      Dinamalar
      Follow us