/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இயற்கை முறையில் நஞ்சில்லா கத்தரி உற்பத்தி மேலுார் விவசாயி அசத்தல்
/
இயற்கை முறையில் நஞ்சில்லா கத்தரி உற்பத்தி மேலுார் விவசாயி அசத்தல்
இயற்கை முறையில் நஞ்சில்லா கத்தரி உற்பத்தி மேலுார் விவசாயி அசத்தல்
இயற்கை முறையில் நஞ்சில்லா கத்தரி உற்பத்தி மேலுார் விவசாயி அசத்தல்
ADDED : ஏப் 29, 2024 05:35 AM

மேலுார்: மேலவளவில் இயற்கை முறையில் குறைந்த செலவில், அதிக மகசூலும், நஞ்சில்லா தன்மையுடனும் கத்தரிக்காய் உற்பத்தி செய்து மேலுார் விவசாயி அசத்தியுள்ளார்.
மேலுார் பகுதியில் அதிகளவில் கத்தரிக்காய் சாகுபடியாகிறது. இக்கத்தரியில் பூச்சித் தாக்குதலும் அதிகமாக உள்ளது. இப்பயிர் நடவு செய்த 15 நட்களுக்குள் இலையின் அடிப்பகுதி, தண்டு உள்ளிட்டவற்றில் தண்டு துளைப்பான், காய்ப்புழு என பலவகை பூச்சிகள் முட்டையிடும். முட்டையிடும் முன் செடிகளை பாதுகாக்க தவறினால், ரசாயன மருந்துகளை தெளிக்கும்போது பூச்சிகள் இறக்கும். பின்னர் மருந்தின் தாக்கம் குறையும் போது, மீண்டும் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து காய்களை தாக்குகின்றன. சில சமயம் கத்திரிக்காய் வருவாயை விட பூச்சி மருந்துகளின் செலவினங்கள் அதிகரித்து விடுகிறது.
விவசாயி செல்வராஜ் கூறியதாவது : கத்தரி பயிரிடும் நிலத்தில் வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழி மற்றும் பண்ணைக் கழிவுகளை மட்க வைத்து, மட்கிய தொழு உரத்துடன் உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் சேர்த்து ஊட்டமேற்றி அடியுரமாக பயன்படுத்துகிறேன்.
மட்கிய தொழு உரத்தில் பன்மடங்கு நுண்ணுயிர்கள் பெருகி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பூச்சிகளை கட்டுப்படுத்த தோட்டத்தில் கத்தரி நடவு செய்த நாளில் இருந்து இயற்கை பூச்சி விரட்டியான வேப்பங்கொட்டை, மாட்டு கோமியம், இஞ்சிபூண்டு, பச்சைமிளகாய், வசம்பு சேர்த்து தயாரித்து வாரம் ஒரு முறை தெளித்துவிடுவேன். இனக்கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் நிற அட்டையை பயன்படுத்துகிறேன். தேவைப்பட்டால் டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தி பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்துகிறேன். அதிக மகசூல் மற்றும் சுவையாக இருக்க பயிர் ஊக்கிகளாக பஞ்சகவ்யம், மீன் அமிலம் மற்றும் புண்ணாக்கு கரைசல் பயன்படுத்துகிறேன். ரசாயன உரத்தை பயன்படுத்தி 50 சென்ட் நிலத்தில் கத்தரி மகசூல் செய்ய ரூ.40 ஆயிரம் செலவாகிறது. ஆனால் இயற்கை முறையில் ரூ.10 ஆயிரமே செலவாகிறது. இதனால் நஞ்சில்லாத, சத்தான கத்திரிக்காயை குறைவான விலையில் விற்க முடிகிறது என்றார். இவரை வாழ்த்த: 96559 02959.

