/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பரி வாகன்' இணையதளம் ஐந்து நாட்களாக முடக்கம்
/
'பரி வாகன்' இணையதளம் ஐந்து நாட்களாக முடக்கம்
ADDED : பிப் 27, 2025 05:52 AM
வாடிப்பட்டி; 'பரி வாகன்' இணையதளம் 5 நாட்களாக முடங்கியதால் மோட்டார் வாகன புகை சோதனை சான்றிதழ் பெற முடியாமல் வாகன உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் 3.75 கோடி வாகனங்கள் உள்ளன. இவற்றுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை புகை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வேண்டும். 'பரிவாகன்' இணையதள முடக்கத்தால் வாகன புகை பரிசோதனை மையம் மூலமாக வாகனத்தின் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வாகனத்தின் புகைப்படங்கள், வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை. வாகன உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் வாகன புதுப்பித்தல் பணிகள் முடங்குகின்றன.
தமிழ்நாடு புகை பரிசோதனை மையங்களின் சங்கத் தலைவர் நந்தகோபால் கூறியதாவது: கடந்த 2019 முதல் அறிமுகமான இந்த செயலியால் பணிகள் சுலபமானது. அதே நேரம் இதுபோன்ற கோளாறுகளால் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உரிய நேரத்தில் பெற முடியவில்லை. சான்றிதழ் இல்லா வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். தமிழகத்தில் 550 புகை பரிசோதனை மையங்களில் பணிகள் பாதித்துள்ளது. 'சர்வர் அப்டேட்' பணியை விடுமுறையில் விரைவாக செய்து முடித்தால் முடக்கம் ஏற்படாது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

