ADDED : மார் 08, 2025 08:12 AM

பூமி உயிர்ப்புடன் உலா வரவேண்டுமென்றால் அதன் மண்ணில் இடும் விதைகளும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். விதையற்ற பயிர்களை பயிரிடுவது என்பது நாம் வாழும் சமுதாயத்துடன் நாமே சண்டையிடுவது போல தான். மண்ணைத்தொட்டு கும்பிடும் சமுதாயத்தில் வளர்ந்த நாம் மண்ணுக்கே ஒவ்வாத விதையில்லா பயிர்களை பயிரிடுவது விநோதமான நடைமுறை.
விதையற்ற பயிர்களில் இருந்து உருவாகும் நெல், காய்கறி, பழங்கள், தானியங்களை சாப்பிடுவது அறிவியலின் வளர்ச்சியல்ல, மனித ஆரோக்கியத்தின் எதிரி. ஒரு விவசாயியாக நான் விதைக்கும் ஒவ்வொரு விதையும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதையே வாழ்நாள் சாதனையாக நினைக்கிறேன்' என்கிறார் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த இயற்கை விவசாயி பூங்குழலி என்ற புவனேஸ்வரி.
மண்ணை உயிர்ப்பிக்கும் விவசாய பெண் பூங்குழலி கூறியது:
தஞ்சாவூர் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்தவள். மதுரை வந்த பின் 2013 ல் இருந்து இயற்கை விவசாயம் செய்கிறேன். 2017 ல் இருந்து பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டு வருகிறேன். தொடர் பயணத்தின் மூலம் 24 வகையான நெல் ரகங்கள், வெண்டையில் 12 ரகங்களை மீட்டுள்ளேன். சிறுவயதில் நான் அனுபவித்த அனைத்து பாரம்பரியத்தையும் இந்த சமுதாயத்திற்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற விதையுள்ள ரகங்களை தொடர்ந்து முன்னெடுக்கிறேன். அதை தொடர்ந்து விளைவிக்கும் போது மீண்டும் மீண்டும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
நன்றாக இருந்த சமுதாயத்தை நாம் கைவிட்டு விட்டோம் என்ற ஆதங்கம் ஏற்பட்ட போது அதற்கான ஆழமான தேடலே விதையுள்ள நெல், எள், காய்கறி, நிலக்கடலை சாகுபடி என்ற சிந்தனை ஏற்பட்டது. இவற்றை விதைத்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான சத்துகளை உணவே பார்த்துக் கொள்கிறது. மண்ணை கெடுக்காமல் விதையை கெடுக்காமல் நான் விளைவிக்கும் காய்கறி, நெல்லில் முழுமைத் தன்மை யுடன் வீரியமுள்ள வம்சாவளியான சத்தான உணவு கிடைக்கிறது.
இயற்கை என்பது ஒன்றையொன்று பாதிக்காமல் ஒருவருக்கொருவர் உதவுவதே. இதற்கு விதைப்புத்தன்மையுள்ள விதைகள் மட்டுமே காரணம். இயல்பை விட்டு விலகி விதையற்ற தாவரங்களை உற்பத்தி செய்தால் எவ்வளவு விலை கொடுத்தாலும் உயிர்ப்பு விதைகளை திரும்பவும் மீட்க முடியாத நிலைக்கு சென்று விடுவோம். அது மனித சமுதாயத்திற்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு என்பதை உணர்ந்ததால் தான் தற்போது வரை விதையுள்ள ரகங்களை உற்பத்தி செய்கிறேன். உடல்நலத்தை கெடுக்காத விதையுள்ள உணவுகளை இந்த தலைமுறையினருக்கு பெண்களாகிய நாம் தான் கற்றுத்தரவேண்டும். நாம் பின்பற்றினால் சமுதாயமும் பின்பற்றும்.
விதையற்ற சமுதாயம் நம்மை பூமியிலிருந்து விலக்கி வைக்கிறது.
சமுதாயத்திற்கு உயிர்ப்பான விதைகளை தருவதை ஒரு பெண்ணாக பெருமையாக உணர்கிறேன் என்றார்.
வாழ்த்த 97869 33459
- -எம்.எம்.ஜெயலட்சுமி