/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரச்னை கொஞ்சமில்லை; கண்டுகொள்ள யாருமில்லை
/
பிரச்னை கொஞ்சமில்லை; கண்டுகொள்ள யாருமில்லை
ADDED : மார் 10, 2025 05:08 AM

மதுரை: தெருவில் திரியும் மாடுகளாலும், கற்கள் தெறிக்கும் ரோடுகளாலும், பாதாளச் சாக்கடை பிரச்னையாலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் மாநகராட்சி 53வது வார்டு மக்கள்.
இந்த வார்டில் உள்ள தெற்குவெளி வீதி, பாண்டிய வெள்ளாளர் தெரு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி உள்ளிட்ட தெருக்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் தொல்லைகள் ஏராளம் எனக்கூறி மனம் குமுறுகின்றனர்.
கழிவுநீரால் நோய்த்தொற்று
காஜா தெரு சிவக்குமார்: இத்தெருவின் 6 அடி அகலம் 3 அடியாக குறைந்துள்ளது. ஆரம்பத்தில் கட்டிய வீடுகள் ரோட்டில் வாகனங்கள் செல்வதற்கும், நடப்பதற்கும் இடையூறின்றி இருந்தது.
சமீபத்தில் கட்டிய வீடுகளில் ரோட்டில் படிகளும், திண்னையும் அமைத்துள்ளனர். இதனால் டூவீலரில் செல்வது கூட சிரமமாக உள்ளது. பாதளாச்சாக்கடை கழிவுநீர் அடிக்கடி வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. நடப்பதற்கும், குழந்தைகள் விளையாடுவதும் கஷ்டமாக இருக்கிறது. கொசுத்தொல்லையுடன், நோய்த்தொற்று அபாயம் உள்ளது. கிருதுமால் நதியில் சாக்கடை கலந்து பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை.
மாடுகளால் அச்சுறுத்தல்
தெற்கு கிருஷ்ணன் கோயில் செந்தில்நாதன்: கிருஷ்ணன் கோயிலை சுற்றி தனிநபர்கள் சிலர் 100க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகள், கோழிகளை கட்டிப் போட்டு வளர்க்கின்றனர். அவற்றை முறையாக பராமரிப்பதில்லை.
தெருக்களில் திரியும் மாடுகளால் வாகன நெரிசலும், விபத்து வாய்ப்பும் அதிகம் உள்ளது. பலமுறை கூறியும் யாரும் கேட்பதில்லை. ஏழு தெருக்களில் மட்டும் குடிநீர் திட்டம் அமைக்கவில்லை. சில இடங்களில் சாக்கடை பைப்லைன் சிறியதாக உள்ளது. அவற்றை அகலப்படுத்த வேண்டும். பள்ளம் மேடான ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.
சப்பாணி கோயில் பகுதியில் பஸ் ஸ்டாப் வேண்டும். சுகாதார மையத்தில் கூடுதல் சிகிச்சைகள் அளித்தால் பயன்பெறுவோம்.
நிறைய திட்டங்கள் உள்ளன
கவுன்சிலர் (தி.மு.க.,) அருண்குமார்: ஏழு ரேஷன் கடைகளும் வாடகை கட்டடத்தில் இயங்கின. மாநகராட்சி இடத்தில் எப்.எப்., ரோட்டில் புதிதாக 2 கடைகள் திறந்துள்ளோம். சப்பாணி கோவில் தெரு உள்பட 10 தெருக்களில் ரூ. 2 கோடி செலவில் தார் ரோடு அமைத்துள்ளோம்.
தெற்கு கிருஷ்ணன் கோயில் 5 தெருக்களில் பேவர் கற்கள் பதித்துள்ளோம். கிருதுமால் வாய்க்காலில் துார்வாரும் பணி தொடங்கப்படும்.
தெற்கு மாரட் வீதி ரோடு ரூ. 40 லட்சத்தில் அமைக்கவுள்ளோம். கிருதுமால் வாய்க்கால் சுத்தகரிப்பு நிலைய திட்டம் வந்துள்ளது.
இதன்மூலம் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். மீன் மார்க்கெட், சப்பாணி கோவில் தெருவில் பஸ் ஸ்டாப் அமைக்கப்படும். சுகாதார மையத்தில் கூடுதல் சிகிச்சை குறித்து குறுகலான ரோடால் வாகனங்கள் வருவதில் சிரமம் எனக் கூறி மறுக்கின்றனர். வேறு இடத்திற்கு மாற்றலாம் என கேட்டுள்ளோம்.