/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்
/
மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்
மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்
மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்
ADDED : ஏப் 22, 2024 05:27 AM

மதுரை, : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று விமரிசையாக நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.19 அம்மனுக்கு பட்டாபிேஷகம், ஏப்.20ல் திக்குவிஜயமும் நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
அம்மனும், சுவாமியும் சர்வ அலங்காரத்தில் ஆடி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். காலை 8:00 மணிக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள மலர்கள், 500 கிலோ பழங்கள், ஸ்ரீவில்லிபுத்துார் கிளி, நவதானிய பெயர் பலகையால் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் சுவாமி, அம்மன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர்.
தங்க அங்கி
சுவாமிக்கான திருமண சடங்கை செந்தில் பட்டரும், அம்மனுக்கான திருமண சடங்கை ஹாலாஸ் பட்டரும் நடத்தினர். காலை 8:51 மணிக்கு வேதமந்திரங்கள் ஒலிக்க, பெருமாள் தாரை வார்த்து கொடுக்க மீனாட்சிக்கு வைரத்திலான திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தின்போது மட்டுமே அணிவிக்கப்படும் தங்க அங்கியுடன் அம்மன் உற்ஸவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 1823ல் முன்னோர்களால் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தீபாராதனை தட்டு மூலம் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.
300 ஆண்டுகள் பழமையான தங்க சந்தன கும்பா, பன்னீர் தெளிப்பு கும்பா மூலம் பன்னீர் தெளிக்கப்பட்டது.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து பெண் பக்தர்களுக்கு அவர்களது கணவர்கள் தாலி கட்டினர். பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். பக்தர்கள் ஆன்லைன் மூலம் மொய் செலுத்தினர்.
சேதுபதி பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருக பக்த டிரஸ்ட் சார்பில் திருமண விருந்து நடந்தது. திருமணத்திற்கு பின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண அலங்காரத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் வீதி உலா வந்தனர். இன்று காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.
இன்று எதிர்சேவை
இதற்கிடையே மதுரை வைகையாற்றில் எழுந்தருள நேற்று மாலை அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டார். இன்று மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
நாளை அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

