ADDED : மே 21, 2024 06:45 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நாளை (மே 22) நடக்கிறது.
இங்கு மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக திருவிழா துவங்கியது.
தினமும் இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி இன்றுடன் (மே21) முடிவடைகிறது.
நாளை (மே 22) அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து சண்முகர், வள்ளி, தெய்வானை விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். காலை 6:00 மணி முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலிலும் வைகாசி வசந்த உற்ஸவம் மே13ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான வைகாசி விசாகம் நாளை (மே 22) நடக்கிறது.
இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு வருவர். மதியம் 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.
பின்னர் சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனையுடன் விசாகத் திருவிழா நிறைவுபெறும். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாஜலம், துணைக்கமிஷனர் கலைவாணன் செய்துள்ளனர்.

