/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு பத்தல... போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்ல...
/
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு பத்தல... போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்ல...
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு பத்தல... போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்ல...
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு பத்தல... போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்ல...
ADDED : மார் 06, 2025 03:16 AM
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமராக்கள் பற்றாக்குறையால் குற்றவாளியை பிடிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது.
இந்த ஸ்டேஷனில் 7 நடைமேடைகள் உள்ளன. முதலாம் நடைமேடையில் பயணிகள் ஓய்வுஅறைகள் உள்ளன. அங்கு பயணிகளின் உடைமைகள் அடிக்கடி திருடுபோகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை ரயில்வே போலீசார் கைது செய்கின்றனர். எனினும், ஸ்டேஷனில் 50 கேமராக்கள் மட்டுமே உள்ளன. முதல் நடைமேடையில் மட்டும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
2, 3ம் நடைமேடையில் பாதி துாரம் மட்டுமே கேமராக்கள் உள்ளன. 4, 5 நடைமேடையில் தேட வேண்டியுள்ளது. 6, 7 நடைமேடையில் கேமராக்கள் இல்லை. நடை மேம்பாலங்கள், நுழைவு வாயில்களில் கேமராக்கள் இருந்தாலும் யார்டு, பிட் லைன், பார்க்கிங் உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பற்றாக்குறையால் அவ்வழியாக குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்.
அதுபோல் திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், கூடல்நகர் ஸ்டேஷன்களில் கேமராக்கள் இருந்தும் 'கனெக் ஷன்' கொடுக்காமல் காட்சிப் பொருளாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.திண்டுக்கல் மார்க்கமாக மதுரை வரும் ரயில்கள் சிக்னலுக்காக கூடல்நகர் அடுத்து தத்தனேரி பகுதியில் நிறுத்தப்படுகின்றன. கண்மாயை ஒட்டி முட்புதர் சூழ்ந்துள்ளதாலும் இரவில் போதிய வெளிச்சம், கேமராக்கள் இல்லாததாலும் சிலர் ரயில்களில் ஏறி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். ஓராண்டுக்கு முன் 'கார்டு' பணியில் இருந்த பெண் ஊழியரை தாக்கி தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ரயில் நின்றாலே பயணிகள் பீதிக்குள்ளாகின்றனர்.
மற்ற பொது இடங்களை போல 'ஸ்பான்சர்கள்' உதவியுடன் ரயில்வே பகுதிக்குள் கேமரா அமைக்க அனுமதி இல்லை. எனவே ரயில்வே நிர்வாகம் கூடுதலாக 50 கேமராக்கள் அனைத்து நடைமேடைகள், யார்டு, வைகை பாலம், பார்க்கிங்கில் அமைக்க வேண்டும். குறிப்பாக தத்தனேரி பகுதியில் மின்விளக்குகள் அமைத்து கேமரா அமைக்க வேண்டும். அங்கு வளர்ந்துள்ள முட்புதர்களை மாநகராட்சியினர் அகற்ற வேண்டும்.