/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இதய நோயாளிக்கு ஒரே நேரத்தில் மூன்று சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
/
இதய நோயாளிக்கு ஒரே நேரத்தில் மூன்று சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
இதய நோயாளிக்கு ஒரே நேரத்தில் மூன்று சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
இதய நோயாளிக்கு ஒரே நேரத்தில் மூன்று சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
ADDED : ஜூன் 11, 2024 06:46 AM
மதுரை : பேரையூரைச் சேர்ந்த 68 வயது ஆண் நோயாளிக்கு இதய அடைப்பு உட்பட மூன்று சிக்கலான சிகிச்சைகள் ஒரே நேரத்தில் செய்யப்பட்டதாக மதுரை அரசு மருத்துவமனை டீன் தர்மராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இதய நெஞ்சக அறுவை சிகிச்சைத்துறையில் சிகிச்சைக்கு வந்த 68 வயது நோயாளிக்கு நெஞ்சுப்பகுதியின் மகாதமனி ரத்தக்குழாய் வீக்கமடைந்து வெடிக்கும் தருவாயில் இருந்தது.
அவருக்கு மாரடைப்பு, இதய ரத்தக்குழாய் அடைப்பு, இதய பாதிப்பும் ஏற்கனவே இருப்பது கண்டறியப்பட்டது. இவருக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானது என்பதால் ரத்தக்குழாய் தமனி வீக்கத்திற்கு ரத்தக்குழாய் வழியே கருவிகள் மூலம் அதிநவீன ஸ்டென்ட்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த ஸ்டென்டு பொருத்தும் முன்பாக ரத்தக்குழாய் வீக்கம் கழுத்து பகுதி வரை வளர்ந்து விட்டதால் அதற்கு தனியாக கழுத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சையும் இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு கூடுதலாக ஸ்டென்டும் செய்ய வேண்டியிருந்தது.
மூன்று சிக்கலான சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, இதய சிகிச்சை நிபுணர்கள் குழு, மயக்க மருந்து நிபுணர்கள் குழுவினர் ஒன்றிணைந்தனர்.
கழுத்து பகுதி பைபாஸ், இதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான ஸ்டென்ட் சிகிச்சை மூன்றையும் ஒரே முறையில் 8 மணிநேரம் கேத்லேப் மற்றும் அறுவை சிகிச்சை அறையில் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
திறந்தநிலை அறுவை சிகிச்சை இல்லாமல் ஸ்டென்ட்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிகிச்சை முடிந்து சில மணி நேரத்தில் நோயாளி எழுந்து நடமாட முடிந்தது.
அதிக ரத்தப்போக்கு, மாரடைப்பு, பக்கவாதம், உயிரிழப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்படக்கூடிய சிக்கலான சிகிச்சை முறைகளை டாக்டர்கள் மார்வின், அமிர்தராஜ், மீனாட்சி சுந்தரம், முத்துக்குமார், பாலசுப்ரமணியம், செல்வராணி, ரமேஷ், இளமாறன், கல்யாணசுந்தரம் ஆகியோர் திட்டமிட்டு வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
தென் மாவட்டங்களிலேயே முதன் முறையாக இந்த சிகிச்சை முறை இங்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் வரை செலவாகும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட ஜெய்க்கா 'டவர் பிளாக்' வளாகத்தில் உள்ள அதிநவீன 'ைஹபிரிட்' அறுவை சிகிச்சை அரங்கில் அனைத்து கருவிகளும் இருப்பதால் தாமதமின்றி சிகிச்சை நடந்தது என்றார்.