/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.5,510 கோடிக்கு வைகையாறு துாய்மை திட்டம் மதிப்பீடு தயார்
/
ரூ.5,510 கோடிக்கு வைகையாறு துாய்மை திட்டம் மதிப்பீடு தயார்
ரூ.5,510 கோடிக்கு வைகையாறு துாய்மை திட்டம் மதிப்பீடு தயார்
ரூ.5,510 கோடிக்கு வைகையாறு துாய்மை திட்டம் மதிப்பீடு தயார்
ADDED : செப் 17, 2024 09:42 PM
மதுரை:வைகையாறு, அதன் கிளை ஆறுகளை மீட்டெடுத்து சுத்தப்படுத்தி பராமரிப்பதற்கு 5,510 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டுமென, தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்க மாநில செயலர் வீரப்பன், உறுப்பினர் பைந்தமிழ் செல்வன் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள 17 ஆற்றுப்பாசன வடிநிலங்களில் ஒன்று வைகையாறு. மூல வைகை உருவாகும் தேனி மாவட்டம் வருஷநாட்டில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கும் வரை 295 கி.மீ., நீளத்திற்கு, வைகை ஆறு பயணம் செய்கிறது.
வைகையாற்றில் சுருளியாறு, கொட்டகுடி எனப்படும் தேனியாறு, வறட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதாநதி, சிறுமலையாறு, சாத்தையாறு, உப்பாறு கிளை ஆறுகள் கலக்கின்றன.
வைகை வடிநிலத்திற்கு உட்பட்ட அணைகள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 19ஆயிரத்து 398 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும் வைகையாற்றில் குப்பை, குடியிருப்புகளின் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்து மாசடைந்துள்ளது.
இவற்றை மீட்டெடுக்கும் வகையில், 5,510 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தை தயாரித்துள்ளனர் ஓய்வு பெற்ற நீர்வளத்துறை தலைமை பொறியாளர்கள்.
தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்க மாநில செயலாளர் வீரப்பன், உறுப்பினர் பைந்தமிழ் செல்வன் இத்திட்டம் குறித்து கூறியதாவது:
வைகையாற்று நீரில் உள்ள, உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் (பி.ஓ.டி.,) அளவு குறித்து மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது. அதன் படி குறியீடு 10க்குள் இருந்தால் ஆற்றுத் தண்ணீரை சுத்திகரிக்க வேண்டியதில்லை, பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம். 10 - 20 என்றால் ஓரளவு மாசு, 20 - 30 என்றால் கூடுதல் மாசு என்றும் 30க்கு மேல் இருந்தால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டியது என்று அர்த்தம்.
மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் 4.5 மி.கி, திருவேடகத்தில் 7.5 மி.கி.,உள்ளது. தேனுாரில் 13.6, துவரிமானில் 18, கோச்சடையில் 22.6 மி.கி., உள்ளது. செல்லுாரில் 74.3, பரமக்குடியில் 109.4 மி.கி., என தண்ணீர் ஆபத்தான மாசடைந்த நிலையில் உள்ளது. இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டியது அவசியம்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர்ப் பாதையை மாற்றி ஆற்றுக்குள் விடாமல் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வேறிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக பிளான்ட் அமைத்து தினமும் 120 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். இப்படி 10 நகராட்சி, 45 பேரூராட்சிகள், 20 கிராமங்களில் மொத்தம் 78 புதிய சுத்திகரிப்பு பிளான்ட் அமைக்க வேண்டும். இதன் மூலம் தினமும் 230 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் கலக்காமல் வேறிடம் கொண்டு செல்லலாம். ஒரு மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி செலவாகும். இதை கணக்கிட்டால் இதற்கு மட்டும் ரூ.1000 கோடி செலவாகும்.
பாதாள சாக்கடை ‛மேன்ஹோலில்' சென்சார் கருவிகளைப் பொருத்திவிட்டால் எந்த இடத்தில் இருந்து மோசமான கழிவுநீர் வரும் என்பதை இணையவழியில் கண்காணித்து சரிசெய்யலாம். ஆற்றின் கரைகளில் பூங்கா, கழிப்பறை வசதி அமைத்து அழகுபடுத்த வேண்டும்.
கிளை ஆறுகள் இணையுமிடத்தில் கரை அரிப்பை தடுக்கும் வகையில் செலவு குறைந்த நவீன கான்கிரீட் தடுப்புகள் அமைக்க வேண்டும். கம்பிவலையில் பாறாங்கற்களை வைத்து சுவர் போன்ற தடுப்புகளை உருவாக்கலாம். ‛ஜியோபேக்' எனப்படும் விலை குறைந்த நவீன பைகளில் மண் அல்லது எம் சாண்ட் மணலை கொட்டி கரையை ஒட்டி தடுப்பு அமைத்து பலப்படுத்தலாம். மரக்கன்றுகளை ஆற்றின் கரையோரம் வளர்த்து காடுகளை உருவாக்கலாம்.
படிப்படியாக திட்டத்தை நிறைவேற்ற ரூ.5510 கோடி ஆகலாம் என மதிப்பீடு செய்துள்ளோம். இந்த திட்டத்தை நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் மூலம் அரசுக்கு அனுப்ப உள்ளோம். கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது போல வைகையை மீட்க தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

