/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
/
இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
ADDED : ஜூலை 03, 2024 05:48 AM
மதுரை : இருபோக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து இன்று (ஜூலை 3) தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என மதுரை கள்ளந்திரி பாசன விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை, திண்டுக்கல், தேனியில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசனத்திற்கான முதல் போகத்திற்கு இன்று காலை வைகை அணையில் இருந்து 900 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 51.31 அடியாக உள்ளது. ஜூன் 1 ல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் இப்போது நாற்று தயாராகி இருக்கும். இனிமேல் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்தால் அக்டோபரில் அறுவடையின் போது மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் பெரியாறு பாசன விவசாயிகள் சங்க உறுப்பினர்கள்.
தண்ணீர் வர ஒருவாரமாகும்
திருப்பதி, கள்ளந்திரி: அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்ப்பாசன பகிர்மான குழுவுக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நடக்கவில்லை. விவசாயிகளை அழைக்கவில்லை. நெல்லின் அறுவடை காலம் 120 நாட்கள். ஜூன் 1 ல் தண்ணீர் திறந்து விடப்படும் போது செப்டம்பரில் கதிர் பிடித்து அக்டோபர் முதல் வாரத்தில் அறுவடை செய்ய ஆரம்பிப்போம்.
ஒரு மாதம் தாமதமாக ஜூலை 3 ல் தண்ணீர் திறக்க உள்ள நிலையில் எங்களுக்கு தகவல் தெரிவிக்காததால் நடவுப்பணிகள் எதுவும் துவங்கவில்லை. தண்ணீர் வந்து சேரவே ஒரு வாரம் ஆகும். அதன் பின் 2 அல்லது 3 முறை தொலி அடித்து உழ வேண்டும். ஜூலை 20 க்கு பிறகு நேரடி நெல் விதைப்பு மட்டும் தான் செய்யமுடியும். அக்டோபரில் அறுவடை செய்யும் போது மழைக்கு சாயாத ஜெ.ஜி.எல். ஏ.எஸ்.டி. 16 ரகங்களை தான் விதைக்க முடியும் என்றார்.
சமாளித்து பார்க்கணும்
முருகன், வாடிப்பட்டி: வாடிப்பட்டி, தென்கரை, மண்ணாடி மங்கலம் கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் அதைக் கொண்டு நாற்று தயாரிக்கும் பணிகளை தொடங்கி விட்டோம். தண்ணீர் திறப்பு தாமதமானதை இயற்கையின் சோதனை என்று தான் சொல்ல வேண்டும். நெற்கதிர்கள் பிடிக்கும் வரை வடகிழக்கு பருவமழையால் பிரச்னை இருக்காது. அக். 3வது வாரம் முதல் நவ. 2வது வாரம் வரை மழை அதிகம் இருக்கும். அந்த நேரத்தில் அறுவடை செய்வது கஷ்டம். சாதாரண அறுவடை இயந்திரத்தை வயலுக்குள் கொண்டு போக முடியாது. பல்சக்கர இயந்திரம் சீக்கிரமாக கிடைக்காது. நெல் கொள்முதல் மையத்தில் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்று வாங்க மறுப்பார்கள். இத்தனை பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும். ஆனால் கடந்தாண்டு முதல்போக சாகுபடி செய்யாத நிலையில் இந்தாண்டு தண்ணீர் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட வேண்டியது தான் என்றார்.