ADDED : செப் 04, 2024 07:08 AM

மதுரை : மதுரையில் 1986 ல் உலகத் தமிழ்ச்சங்கம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. பின்னர் 2010 ல் முதல்வர் கருணாநிதியால் அது, 'தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்' என்ற பெயரில் செயல்படும் என அறிவித்து, அதற்கு ரூ.100 கோடியை ஒதுக்கப்பட்டது.
2012ல் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை என்ற பெயரில் செயல்பட உத்தரவிட்டு, மதுரை தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலத்தில் ரூ.37.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு 2016ல் திறக்கப்பட்டது. இந்த தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 ன்படி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பின்னர், செப்டம்பருக்குள் வரவு செலவு அறிக்கையை தணிக்கை செய்து, பொதுக்குழு அங்கீகாரம் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்து, சங்கப் பதிவை புதுப்பிக்க வேண்டும்.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பொதுக்குழு நடத்தப்படாததால் தமிழ்ச் சங்கம் புதுப்பிக்கப்படவில்லை. கடந்தாண்டு அமைச்சர் சாமிநாதன், துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது தமிழ்ச்சங்கம் புதுப்பிக்கப்படாதது தெரிந்தது. உடனே அவர் பதிவை புதுப்பிக்கும் பணியை முடுக்கிவிட்டார்.
இதையடுத்து கடந்த மாதம் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பதிவுச் சட்டப்படி பத்தாண்டுகள் புதுப்பிக்கப்படவில்லை என்றால் சங்கம் பதிவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும். தற்போது உலகத் தமிழ்ச்சங்கம் பதிவு நீக்கத்தில் இருந்து தப்பியுள்ளது.