/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கோட்டத்தில் 'இன்டர்லாக்கிங்' வசதி இல்லாத 121 ரயில்வே கேட்களால் அபாயம் விபத்துகளை தவிர்க்க உடனே அமைப்பது அவசியம்
/
மதுரை கோட்டத்தில் 'இன்டர்லாக்கிங்' வசதி இல்லாத 121 ரயில்வே கேட்களால் அபாயம் விபத்துகளை தவிர்க்க உடனே அமைப்பது அவசியம்
மதுரை கோட்டத்தில் 'இன்டர்லாக்கிங்' வசதி இல்லாத 121 ரயில்வே கேட்களால் அபாயம் விபத்துகளை தவிர்க்க உடனே அமைப்பது அவசியம்
மதுரை கோட்டத்தில் 'இன்டர்லாக்கிங்' வசதி இல்லாத 121 ரயில்வே கேட்களால் அபாயம் விபத்துகளை தவிர்க்க உடனே அமைப்பது அவசியம்
ADDED : ஜூலை 14, 2025 02:56 AM
மதுரை: மதுரை கோட்டத்தில் 'இன்டர்லாக்கிங்' வசதி இல்லாத 121 ரயில்வே கேட்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடலுார் செம்மங்குப்பம் சம்பவம் போன்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் துரிதப்படுத்த பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ரயில்வே கேட்களில், சிக்னலுடன் தொடர்புடைய 'இன்டர்லாக்கிங்', தொடர்பில்லாத 'நான் - இன்டர்லாக்கிங்' என இருவகை உண்டு.
நான் - இன்டர்லாக்கிங்
இரு ஸ்டேஷன்களுக்கு இடையே இருக்கும் இவ்வகை ரயில்வே கேட், அருகில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் கட்டுப்பாட்டில் இயங்கும். அவர் ஒரு ரயிலை அனுப்பும்முன் சம்பந்தப்பட்ட கேட் கீப்பரிடம் 'பிரைவேட் நம்பர்' எனும் 2 இலக்க எண்ணை வழங்குவார். அதை பதிவேட்டில் குறித்தபின் கேட்டை மூடுவார். கேட்கீப்பர் ஒரு எண்ணை ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவிப்பார். இதன்பிறகே ஸ்டேஷன் மாஸ்டர் ரயிலை அனுப்புவார்.
ரயில் கடந்து செல்லும் வரை கேட்டை திறக்கக் கூடாது. சில இடங்களில் ஸ்டேஷனுக்கும், கேட்டிற்கும் இடையே அதிக துாரம் இருக்கும். ரயில் கடந்து செல்லும் வரை கேட் மூடப்படும் என்பதால் ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். எனவே சில கேட் கீப்பர்கள், ரயில் அருகில் வந்தவுடன் மூடலாம் என கேட்டை மூடாமலேயே 2 இலக்க எண்ணை ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழங்கிவிடுவர். அதன்பின் மூடாமல் மறந்தும் விடும்போது, கடலுார் விபத்து சம்பவம் போன்று நடந்துவிடுகிறது.
இன்டர்லாக்கிங் கேட்
இதனை தவிர்க்கவே ரயில்வே கேட்களை சிக்னலுடன் இணைக்கும் 'இன்டர்லாக்கிங்' வசதி அமல்படுத்தப்படுகிறது. ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து எண்ணைப் பெற்ற கேட் கீப்பர், கேட்டை மூடி, அதற்கான சாவியை சிக்னலுக்கான 'ரிலே' பெட்டியில் வைப்பார்.
சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியதை உறுதி செய்தபின் ஸ்டேஷன் மாஸ்டர் ரயிலை அனுப்புவார். ரயில் கடந்து செல்லும் வரை சாவியை எடுக்க முடியாது. ரயில் சென்றபின் ஒரு நிமிடம் கழித்து சிக்னல் ரிலீஸ் செய்யப்பட்டு சாவியை கேட் கீப்பர் எடுத்து கேட்டை திறப்பார். இந்த கேட்களில் வாகனங்கள் மோதி சேதமடைந்தால், சிக்னல் கிடைக்காமல் ரயில்கள் நிற்க நேரிடும். இருப்பினும் அசம்பாவிதம் தவிர்க்கப்படும்.
மதுரை கோட்டத்தில்
2019ல் மதுரைக் கேட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட்கள் முற்றிலும் நீக்கப்பட்டதாக அப்போதைய கோட்ட மேலாளர் நீனு இட்டியரா தெரிவித்தார். கோட்டத்தில் தற்போது 433 ரயில்வே கேட்களில், இன்டர்லாக்கிங் வசதி 121 கேட்களில் இல்லை. அதிகபட்சமாக திருநெல்வேலி - செங்கோட்டை, மானாமதுரை - ராமேஸ்வரம் ஆகிய பிரிவுகளில் தலா 19, விருதுநகர் - செங்கோட்டை பிரிவில் 18, திருச்சி - காரைக்குடி - மானாமதுரை பிரிவில் 17, மதுரை - மானாமதுரை பிரிவில் 11, திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி பிரிவில் 13 கேட்கள் 'நான் - இன்டர்லாக்கிங்' முறையில் இயங்குகின்றன.
திருச்சி - திண்டுக்கல் பிரிவில் 5, விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி பிரிவில் 2, வாஞ்சி மணியாச்சி - துாத்துக்குடி பிரிவில் 4, மானாமதுரை - விருதுநகர் பிரிவில் 5, செங்கோட்டை - புனலுார் பிரிவில் 1, திருநெல்வேலி - திருச்செந்துார் பிரிவில் 7 கேட்டுகள் 'நான் - இன்டர்லாக்கிங்' முறையில் இயங்குகின்றன. இதுபோன்ற கேட்கள் உள்ள இடங்களில் ரயில்வே நிர்வாகம் இன்டர்லாக்கிங் முறையை அமல்படுத்தலாம். சுரங்கப் பாதை அமைக்கலாம். எனினும், தண்டவாளங்களை கடக்கும்முன் நின்று, ரயில் வருவதை கவனித்து கடப்பதே அனைவரின் பொறுப்பு.