/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 1616 பேர் காசநோயாளிகள் விழிப்புணர்வு குறைவால் பாதிப்பு அதிகம்
/
மதுரையில் 1616 பேர் காசநோயாளிகள் விழிப்புணர்வு குறைவால் பாதிப்பு அதிகம்
மதுரையில் 1616 பேர் காசநோயாளிகள் விழிப்புணர்வு குறைவால் பாதிப்பு அதிகம்
மதுரையில் 1616 பேர் காசநோயாளிகள் விழிப்புணர்வு குறைவால் பாதிப்பு அதிகம்
ADDED : டிச 08, 2024 04:45 AM
மதுரை : ''விழிப்புணர்வு குறைவால் காசநோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரிக்கின்றனர்.100 குழந்தைகள் உட்பட 1616 பேர் சிகிச்சை பெறுகின்றனர் '' என மதுரை மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த தீவிர காசநோய் ஒழிப்பு முகாம் பிரசார வாகனத்தை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் அஜித் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்தார். சுகாதார, தொழுநோய் துணை இயக்குநர்கள் குமரகுருபரன், விஜயன், நகர்நல அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபாரதி நன்றி கூறினார்.
காசநோய் பிரிவு துணை இயக்குநர் ராஜசேகரன் கூறியதாவது: மதுரையில் 100 குழந்தைகள் உட்பட 1616 காசநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் ஆண்கள் 70 சதவீதம் பேர். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்காத போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. எச்.ஐ.வி., சர்க்கரை நோய், புகைப்பவர்கள், மது அருந்துபவர்கள், ஏற்கனவே காசநோய்க்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு சிறப்பு கருவி மூலம் 'நியூக்ளிக் ஆசிட் ஆம்ப்ளிபிகேஷன்' (என்.ஏ.டி.) எனப்படும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. மதுரையில் 19 மையங்களில் இக்கருவிகள் உள்ளன. இதன் மூலம் மாதம் 10ஆயிரத்து 500 பேருக்கும் பிற நோயாளிகளுக்கு 'மைக்ரோஸ்கோப்பி' மூலம் சளி பரிசோதனை செய்கிறோம்.
காற்றிலுள்ள 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' எனப்படும் கிருமியால் மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது. நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள 10 சதவீதம் பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதுரை மாவட்டத்தில் காசநோய் பரவலை 40 சதவீதமாகவும் இறப்பை 38 சதவீதமாகவும் குறைத்துள்ளோம். சாதாரண காசநோய்க்கு 6 மாதங்களும் தீவிரமானால் 9 முதல் 20 மாதங்களுக்கு இலவச மருந்துகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் மாத்திரை சாப்பிடும் காலம் வரை மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை நோயாளியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மாத்திரைகளும் இலவசம்.
சளி, இருமல் வந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சளி பரிசோதனை செய்து ஆரம்பநிலையிலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை பெறலாம் என்றார்.