/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாய், மகன் கொலை 2 பேருக்கு ஆயுள் தண்டனை
/
தாய், மகன் கொலை 2 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 28, 2025 11:37 PM
மதுரை: மதுரையில் நகை பணத்திற்காக தாய், மகனை கொலை செய்த வழக்கில் டெய்லர் உள்ளிட்ட 2 பேருக்கு மாவட்ட 5 வது கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
மதுரை மேல அனுப்பானடி காளிமுத்து 40. டெய்லர். இவரது கடையில் தைக்கும் துணிகளுக்கு பட்டன் போடுவதற்காக காமராஜர்சாலை நவரத்தினபுரத்தில் 6 வயது மகனுடன் வசித்த துர்காதேவியிடம் கொடுத்து வந்தார். தொழில் ரீதியாக அவரது வீட்டிற்கு அடிக்கடி காளிமுத்து சென்றுவந்தார்.
காளிமுத்துவின் நண்பர் மேல அனுப்பானடி வேன் டிரைவர் முத்துபாண்டி 42. இவர்கள் பணத்தேவைக்காக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இருவரும் 2011 செப்., 12 இரவு 9:30 மணிக்கு துர்காதேவியின் வீட்டிற்கு சென்றனர். மாடிப்படியில் நின்ற துர்காதேவியின் மகனிடம் 'மோனோ குரோட்டோபாஸ்' விஷ மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்தனர். அதை சிறிதளவு குடித்த சிறுவன் வீட்டில் 'டிவி' இருந்த அறைக்குள் சென்றார்.
சட்டைக்கு பட்டன் போட வேண்டும் என துர்காதேவியிடம் காளிமுத்து கூறினார். அதை வாங்கிக் கொண்டு துர்காதேவி வீட்டிற்குள் நுழைந்தபோது அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10.5 பவுன் தங்க நகையை இருவரும் பறித்தனர்.
பீரோவிலிருந்த ரூ.86ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். பின் கத்தியால் துர்காதேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். வெளியே வந்தபோது 'டிவி' அறையில் இருந்த துர்காதேவியின் மகனையும் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். காளிமுத்து, முத்துப்பாண்டி மீது தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக காளிமுத்து, முத்துபாண்டிக்கு தலா 10 ஆண்டுகள், கொள்ளையடித்த குற்றத்திற்காக தலா 10 ஆண்டுகள், கொலை குற்றத்திற்காக தலா ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
இதை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அபராதம் தலா ரூ.15 ஆயிரம் விதிக்கப்படுகிறது,' என்றார்.