/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டெட்' தேர்வில் மத்திய அரசின் விலக்கு எதிர்பார்ப்பில் 25 லட்சம் ஆசிரியர்கள்' என்.சி.டி.இ., விதியை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதங்கள்
/
'டெட்' தேர்வில் மத்திய அரசின் விலக்கு எதிர்பார்ப்பில் 25 லட்சம் ஆசிரியர்கள்' என்.சி.டி.இ., விதியை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதங்கள்
'டெட்' தேர்வில் மத்திய அரசின் விலக்கு எதிர்பார்ப்பில் 25 லட்சம் ஆசிரியர்கள்' என்.சி.டி.இ., விதியை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதங்கள்
'டெட்' தேர்வில் மத்திய அரசின் விலக்கு எதிர்பார்ப்பில் 25 லட்சம் ஆசிரியர்கள்' என்.சி.டி.இ., விதியை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதங்கள்
ADDED : நவ 16, 2025 04:28 AM

மதுரை: 'நாடு முழுவதும் என்.சி.டி.இ., (தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்) விதியை சுட்டிக்காட்டி 'டெட்' தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என என்.சி.டி.இ., தலைவர் பங்கஜ் அரோராவை சந்தித்து, தேசிய ஆசிரியர் சங்கம், அகில இந்திய பாரத தேசிய கல்விக் கூட்டமைப்பு (ஏ.பி.ஆர்.எஸ்.எம்.,) வலியுறுத்தின.
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டெட்) கட்டாயம் என செப்.,1ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தும், அவர்கள் பதவி உயர்வு கோரினால் 'டெட்' கட்டாயம் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 1.30 லட்சம் உட்பட நாடு முழுவதும் 25 லட்சம் ஆசிரியர்கள் பணி கேள்விக்குறியாகியுள்ளது. இரண்டு ஆண்டிற்குள் 'டெட்' தேர்ச்சி பெறாவிட்டால் விருப்ப ஓய்வில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு என்.சி.டி.இ., விதிமுறைக்கு எதிரானது என தேசிய அளவில் ஆசிரியர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இப்பிரச்னையை மத்திய அரசுக்கு எதிராக திசை திருப்பும் வகையில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், சிறப்பு 'டெட்' தேர்வையும் அறிவித்துள்ளது. இதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். பலர் விடுப்பு எடுத்து படிக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் மாணவருக்கான கற்பித்தல் பாதிக்கும் நிலை உள்ளது.
தமிழகம் உட்பட சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள மாநிலங்கள் இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்ய முயற்சிக்கின்றன. எனவே 25 லட்சம் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு இவ்விஷயத்தில் ஒரு உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் சங்க தமிழக பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது: ஏ.பி.ஆர்.எஸ்.எம்., அமைப்பு செயலாளர் மகேந்திர கபூர், பொதுச் செயலாளர் கீதா பட், தெலுங்கானா மாநில டி.பி.யு.எஸ்., தலைவர் ஹனுமந்தராவ் உள்ளிட்ட குழு, என்.சி.டி.இ., தலைவரை சந்தித்து விளக்கினோம்.
ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதியுடன் போட்டித் தேர்வுகளை சந்தித்து தான் பணியில் சேர்ந்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்று, வயது முதிர்ந்த நிலையில் 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என்பது மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
இதுமட்டுமின்றி கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி 'டெட்' தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தொடர்பான முதன்மை அறிவிப்பை என்.சி.டி.இ., வெளியிட்டது. இதன்படி 23.8.2010க்கு முன் பணிநியமனம் பெற்றோர் தேர்வு எழுத தேவையில்லை. அந்த தேதிக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு அத்தேதிக்கு பின் நியமனம் பெற்றோருக்கும் விலக்கு அளிக்க வழிவகை செய்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு இதற்கு முரணாக உள்ளது.
இதுகுறித்து என்.சி.டி.இ., தலைவர் பங்கஜ் அரோரா, உறுப்பினர் செயலர்களை டில்லியில் சந்தித்து விளக்கம் அளித்தோம். அதில் 'டெட்' தேர்வை முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தக் கூடாது.
என்.சி.டி.இ., 23.8.2010ல் வெளியிட்ட அறிவிப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்.சி.டி.இ., மறுசீராய்வு மனு செய்யும் வழியை ஆராய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்தோம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக என்.சி.டி.இ., தலைவர் உறுதியளித்துள்ளார் என்றார்.

