ADDED : செப் 26, 2025 03:46 AM

மதுரை: பத்திரப் பதிவு முத்திரைத் தீர்வை கட்டண ஆவணத்தை வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது மதுரை நீதிமன்றம்.
மதுரையை சேர்ந்த கதிரேசன் தனது உறவினர் ஒருவர் பெயரில் நிலம் வாங்கியது சோழவந்தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. முத்திரைத் தீர்வை கட்டணத்தை சரியாக நிர்ணயித்து வசூலிக்க மதுரை பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக சிறப்பு துணை கலெக்டர் (முத்திரைத் தீர்வை) அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.
அங்கு உதவியாளர்போல் அரசின் அங்கீகாரம் இன்றி வேலை செய்த ரகுமான் ஆவணங்களை கையாண்டார். ஆவணத்தை ஒப்படைக்க கதிரேசன் வலியுறுத்தினார். அதற்கு ஏற்பாடு செய்வதாகக்கூறி அரசுக்கு ரூ.27 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றார் ரகுமான்.
மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கதிரேசன் புகார் செய்தார். அவரிடம் 2015 ல் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது ரகுமான் பிடிபட்டார்.
லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். ரகுமானுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4000 அபராதம் விதித்து நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.