/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரதமர் மோடியை சந்திக்கும் 40 தமிழக இளைஞர்கள்
/
பிரதமர் மோடியை சந்திக்கும் 40 தமிழக இளைஞர்கள்
ADDED : டிச 22, 2024 06:52 AM

மதுரை : ''தமிழக இளைஞர்கள் 40 பேர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் தமிழகம், புதுச்சேரி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், மைபாரத், நேரு யுவகேந்திரா இணைந்து ஆன்லைன் மூலம் முதற்கட்டமாக நவ.25 முதல் டிச.10 வரை வினாடி- வினா போட்டி நடத்தியது. இதற்காக மைபாரத் இணையதளத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் இளைஞர்கள் முன்பதிவு செய்தனர்.
இரண்டாவது கட்டமாக ஆன்லைன் மூலம் 10 தலைப்புகளில் டிச.13 முதல் 20 வரை கட்டுரைப் போட்டி நடந்தது. 2105 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 250 பேர் இறுதியாக டிச.27, டிச.28ல் சென்னை லயோலா கல்லுாரியில் நடைபெற உள்ள நேரடி செயல்விளக்க போட்டியில் பங்கேற்பர். கணினி திரை மூலம் விளக்கம் அளிப்பர். ஒரு கட்டுரைக்கு 4 பேர் வீதம் மொத்தம் 40 பேரை நடுவர்கள் தேர்வு செய்வர்.
டில்லியில் ஜன.11, ஜன.12ல் 28 வது தேசிய இளைஞர் திருவிழா நடைபெறும். அதன் ஒரு பகுதியாக ஜன.12 ல் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழாவில் 40 பேரும் பங்கேற்பர். அன்று இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.