/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு முதல்வர் அறிவித்த 6 திட்டங்கள்
/
மதுரைக்கு முதல்வர் அறிவித்த 6 திட்டங்கள்
ADDED : டிச 08, 2025 06:08 AM

மதுரை: மதுரை உத்தங்குடியில் 1.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கல், புதிய, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் துவக்க விழாவில், மதுரை வளர்ச்சிக்கான மேலும் 6 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மேடையில் அறிவித்தார்.
மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வைகை ஆற்றின் வடகரையில் விரகனுார் ரிங்ரோடு முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ. 130 கோடியில் புதிய ரோடு அமைக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதுார், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் தற்போதுள்ள பழைய பாதாளச் சாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை கிழக்கு தாலுகா உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் ரூ. 7 கோடி செலவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலூர் தாலுகா கேசம்பட்டி - பெரிய அருவி நீர்த்தேக்கம், அதைச் சார்ந்த கண்மாய்கள் ரூ.2.60 கோடியில் புனரமைக்கப்படும். மேலும் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.9.50 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
மதுரை மேற்கு தாலுகா கொடிமங்கலம், மேலமாத்துார், புதுக்குளம், விளாச்சேரி கிராமங்களில் உள்ள பல்வேறு ஏரிகள், கால்வாய்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
விழாவில் பங்கேற்றவர்கள் வாடிப்பட்டி தாலுகா, அலங்காநல்லூர் ஒன்றியத்தில் சாத்தையாறு அணை - வைகாசிப்பட்டி, முடுவார்பட்டி - சல்வார்பட்டி, பாலமேடு - வேம்பரலை ஆகிய ரோடுகள் ரூ. 1.50 கோடியில் வனத்துறை அனுமதி பெற்று மேம்படுத்தப்படும் என்றார்.
விழாவில் அமைச்சர்கள் நேரு, ஏ.வ.வேலு, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தியாகராஜன், பெரியகருப்பன், எம்.பி.,க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.பாலாஜி (வடக்கு தி.மு.க.,), மா.ஜெயராம் (நகர் தி.மு.க.,), ம.தி.மு.க., நகர் மாவட்ட செயலாளர் முனியசாமி பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., அன்பழகன் நன்றி கூறினார்.

