ADDED : ஏப் 18, 2025 05:56 AM
மதுரை: மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் ஏராளமான பழைய பஸ்கள் இயங்கிக் கொண்டிருந்தன. இந்நிலையில் அவற்றை மாற்றி புதுப்பொலிவூட்டும் வகையில் புதிய பஸ்கள் சில மாதங்களுக்கு முன் வந்திறங்கின.
அவற்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இயக்கி வைத்தார். இதன்பின் பல பழைய பஸ்கள் நீக்கப்பட்டு, ஏராளமான நீல, மஞ்சள் நிற பஸ்கள், நீலநிற தாழ்தள பஸ்கள் என பலவும் வலம் வருகின்றன. இன்னும் மகளிர் சிறப்பு பஸ்கள் பலவும் மிகவும் பழமையானதாக ஓடுகின்றன.
இந்நிலையில் மதுரை கோட்டத்தில் புதிதாக 60 பஸ்கள் வர உள்ளன. இவற்றை உருவாக்கி, பதிவு செய்து விரைவில் இயங்க உள்ளன.
சிலநாட்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பஸ்களை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் துவக்கி வைக்க உள்ளார். ஏற்பாடுகளை மேலாண் இயக்குனர் சிங்காரவேலு செய்து வருகிறார்.
அதிகாரிகள் கூறுகையில், ''மூன்று மண்டலங்களுக்கும் புதிய பஸ்கள் விரைவில் வர உள்ளன. பணியில் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 60 பேர் ஓட்டுனர், நடத்துனர்கள் புதிதாக பணிநியமனம் செய்யப்பட உள்ளனர். அடுத்து விரைவில் 68 தாழ்தள பஸ்கள் வாங்கப்பட்டு இயக்கப்பட உள்ளன'' என்றார்.

