/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 746 பேர் ஆப்சென்ட்
/
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 746 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 02, 2024 04:08 AM
மதுரை : மதுரையில் நடந்த பிளஸ் 2 தமிழ் தேர்வில் 746 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் 323 பள்ளிகளை சேர்ந்த 35,282 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 111 மையங்களில் நடந்த தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகளில் 33,585 பேர் பங்கேற்றனர். தமிழில் 746, பிரஞ்ச், சமஸ்கிருதம் தலா 1, ஹிந்தி 2 என மொத்தம் 750 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தேர்வையொட்டி முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என 2700 பேர் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் என 9 அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் கண்காணித்தன. கடந்தாண்டு தனியார் பள்ளி மையத்தில் முறைகேடு நடந்ததால் இந்தாண்டு தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் தலைமையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அவர் டி.வி.எஸ்., மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளிலும், கலெக்டர் சங்கீதா, சி.இ.ஓ., கார்த்திகா ஆகியோர் ஓ.சி.பி.எம்., உள்ளிட்ட பள்ளி மையங்களிலும் ஆய்வு செய்தனர்.
அலைபேசிக்கு கட்டுபாட்டு
இதுவரை முதன்மை மற்றும் துறை அலுவலர்கள் தேர்வு மையங்களில் அவசர தேவைகளுக்கு அலைபேசி பயன்படுத்த நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு மட்டும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே அலைபேசியில் பேசும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. பிற அலுவலர்கள், ஆசிரியர்கள் கட்டுப்பாட்டு மையங்களில் அலைபேசியை ஒப்படைத்த பின் மையங்களுக்குள் சென்றனர்.

