/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீரவசந்தராயர் மண்டபத்திற்கு 79 துாண்கள் தயார்: பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்த தீவிரம்
/
வீரவசந்தராயர் மண்டபத்திற்கு 79 துாண்கள் தயார்: பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்த தீவிரம்
வீரவசந்தராயர் மண்டபத்திற்கு 79 துாண்கள் தயார்: பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்த தீவிரம்
வீரவசந்தராயர் மண்டபத்திற்கு 79 துாண்கள் தயார்: பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்த தீவிரம்
UPDATED : அக் 24, 2025 07:10 AM
ADDED : அக் 24, 2025 02:52 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை வரும் பிப்ரவரிக்குள் நடத்தும் வகையில், வீரவசந்தராயர் மண்டப பணிகளை டிசம்பருக்குள் முடிக்க கோயில் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் மின்கசிவால் தீப்பிடித்து சிதிலமடைந்தது. இதன் காரணமாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாகவும் 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கும்பாபிஷேகம் நடத்த முடிவானது. ஆனால் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளுக்கு உரிய கற்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இம்மண்டப பணி முடிந்த பிறகே கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், '2 ஆண்டுகளுக்குள் (2025ம் ஆண்டிற்குள்) நடத்தப்படும்' என அறிவித்தார்.
இதைதொடர்ந்து கோயில் திருப்பணிகள் ஒருபுறம், வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி மறுபுறம் என நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்பணிகளை ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர், 'பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்த பட்டர்கள் சம்மதித்தால் டிசம்பரிலேயே நடத்தப்படும்' என தெரிவித்தார்.
சில ஹிந்து அமைப்புகள் 'வீரவசந்தராயர் மண்டப பணிகளை முடித்தபிறகே நடத்த வேண்டும்' என தெரிவித்தன.
இதன்காரணமாக டிசம்பருக்குள் வீரவசந்தராயர் மண்டப பணிகளை முடித்து, திட்டமிட்டபடி பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. வீரவசந்தராயர் மண்டபத்திற்கு மொத்தம் 79 கல்துாண்கள் தேவை. இதில் 23 துாண்கள் பொருத்தப்பட்டுள்ளன. 27 துாண்கள் பொருத்துவதற்கு தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள 29 துாண்களுக்கு கற்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் ஓரிரு நாளில் செதுக்கும் பணிகள் துவங்க உள்ளன.

