/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி முறைகேட்டில் கைதான 8 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
/
மதுரை மாநகராட்சி முறைகேட்டில் கைதான 8 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
மதுரை மாநகராட்சி முறைகேட்டில் கைதான 8 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
மதுரை மாநகராட்சி முறைகேட்டில் கைதான 8 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
ADDED : ஜூலை 05, 2025 06:12 AM
மதுரை: மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் ரூ.பல கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் உதவி கமிஷனர் உட்பட 8 பேர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர். இதில் 2 பேருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
மாநகராட்சியில் தனியார் வணிக கட்டடங்களுக்கு விதிமீறி வரிவிதிப்பு செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு செய்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க., மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக மண்டலம் 3 அலுவலகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மண்டல தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் சதீஷ், கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் மூன்று நாட்களுக்கு முன் செந்தில்குமரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று அடைப்புகள் இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஓய்வு உதவி கமிஷனர் ரெங்கராஜனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 8 பேரும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர்.
அடுத்தது கைது படலம்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டதால் அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்த முடியவில்லை. இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் தொடரும் என்றனர். இத்தகவலால் மாநகராட்சி முறைகேட்டில் சிக்கியவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.