UPDATED : நவ 12, 2026 09:57 PM
ADDED : நவ 12, 2026 09:55 PM
மதுரை: மதுரையில் கருணாநிதி பெயரில் உள்ள நுாலகத்தில் போலி பதிவு எண்ணுடன் வைக்கப்பட்டிருந்த 800 புத்தகங்கள் அகற்றப்பட்டன.
கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தில் ‘அகல்விளக்கு’, ‘பீனிக்ஸ்’ பதிப்பகங்களின் போலி புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மதுரையில் கருணாநிதி பெயரில் உள்ள நுாலகத்திலும் அத்தகைய பதிப்பகங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பீனிக்ஸ் பதிப்பக பெயரில் போலி புத்தகங்கள் இருப்பதாக ஐ.எஸ்.பி.என்., எனப்படும் புத்தகங்களுக்கான தரக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
காப்புரிமையற்ற புத்தகங்களின் தலைப்பு, எழுத்தாளர்களின் பெயர்களை பயன்படுத்தி தரக் குறியீட்டு எண் பெற்று, பீனிக்ஸ் பதிப்பகம் புத்தகங்களை அச்சிட்டு இந்நுாலகத்திற்கு வழங்கியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பீனிக்ஸ் பதிப்பகத்தின் 800 புத்தகங்களை நுாலக நிர்வாகம் அப்புறப்படுத்தியது. இவை 2022–23ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டவை.
நுாலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சர்ச்சைக்கு பின் பீனிக்ஸ் பதிப்பக பெயரில் உள்ள அனைத்து புத்தகங்களையும் அப்புறப்படுத்த உத்தரவு வந்தது. இதையடுத்து ஆங்கிலம், அறிவியல், கணினி அறிவியல் உட்பட பல்வேறு பிரிவுகளில் 356 தலைப்புகளின் கீழ் 800 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அகல்விளக்கு பதிப்பக புத்தகங்கள் இல்லை என்றார்.
