/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் கருகிய வெப்பநிலை கண்காணிப்பு கருவி; ‛புகை அலாரம்' அடித்ததால் தீவிபத்து தவிர்ப்பு
/
அரசு மருத்துவமனையில் கருகிய வெப்பநிலை கண்காணிப்பு கருவி; ‛புகை அலாரம்' அடித்ததால் தீவிபத்து தவிர்ப்பு
அரசு மருத்துவமனையில் கருகிய வெப்பநிலை கண்காணிப்பு கருவி; ‛புகை அலாரம்' அடித்ததால் தீவிபத்து தவிர்ப்பு
அரசு மருத்துவமனையில் கருகிய வெப்பநிலை கண்காணிப்பு கருவி; ‛புகை அலாரம்' அடித்ததால் தீவிபத்து தவிர்ப்பு
ADDED : நவ 24, 2024 04:27 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய அறுவை சிகிச்சை அரங்குகளுக்கான வளாகத்தின் 6வது மாடியில் வெப்பநிலையை கண்காணிக்கும் கருவி நேற்று முன்தினம் கருகியது. 'புகை அலாரம்' அடித்து எச்சரித்ததால் தொடர் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.
புதிய கட்டடத்தில் ரூ.313 கோடியில் ஆறு தளங்கள் அமைக்கப்பட்டு இந்தாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. இங்கு புகை அலாரம், தீ அலாரம், தீப்பிடித்தால் தானாக தண்ணீரை பீய்ச்சும் 'ஸ்பிரிங்ளர்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
3 முதல் 5 வது மாடி வரை 22 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. 6வது மாடியில் அனைத்து அறுவை சிகிச்சைக்கான கருவிகளுடன் கூடிய 'ஹைபிரிட்' அரங்கு தயாராகி வருகிறது.
இந்த அரங்கில் 24 மணி நேரமும் 'ஏசி' செயல்பட வேண்டும். வெப்பநிலையையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் வெப்பநிலை கருவி பொருத்தப்பட்டுள்ளது.
'ஹைபிரிட்' அரங்கில் வெப்பநிலை அதிகரித்ததால் நேற்று முன்தினம் (நவ.22) இரவு 11:00 மணிக்கு இந்த கருவி புகைந்து கருகியதுடன் கரும்புகையை வெளியேற்றியது.
புகை அலார கருவி உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதும் பணியில் இருந்தவர்கள் உடனடியாக 'ஏசி' செயல்பாட்டை நிறுத்தினர்.
இந்த புகை கீழ்த்தள அறுவை சிகிச்சை அரங்குகளுக்குள் பரவியது. புகையை வெளியேற்றும் வரை தற்காலிகமாக அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. பின் நேற்று சிறிய அறுவை சிகிச்சைகள் மட்டும் செய்யப்பட்டன.
புதிய கட்டடத்தில் எச்சரிக்கை அலார கருவிகள் இருந்ததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இங்குள்ள பழைய மருத்துவமனை, தீவிர விபத்து வளாகங்களில் பாதுகாப்புக்கான எந்த எச்சரிக்கை கருவிகளும் பொருத்தப்படவில்லை.
தீப்பிடித்தால் பயன்படுத்தும் தீயணைப்பான் கருவி மட்டுமே உள்ளன. தினமும் 10 ஆயிரம் பேர் வந்து செல்லும் இம்மருத்துவமனையில் பணியாளர்கள், நோயாளிகளின் பாதுகாப்பு கருதி புகை, தீவிபத்து எச்சரிக்கை கருவிகளை பொருத்த வேண்டும்.

