/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருணை பணிநியமனம் பெற்ற பெண் நடத்துனர் பதவி இழப்பு
/
கருணை பணிநியமனம் பெற்ற பெண் நடத்துனர் பதவி இழப்பு
ADDED : ஜூலை 07, 2025 02:36 AM

மதுரை : மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கருணை அடிப்படையில் நடத்துனராக பணிநியமனம் பெற்ற பெண் நடத்துனர் 3 மாதங்களில் பணிவாய்ப்பை இழந்து தவிப்பில் உள்ளார்.
மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி 35. பி.ஏ., பட்டதாரியான இவர், நடத்துனர் உரிமம் பெற்றுள்ளார். இவரது தந்தை சங்கர் 2023 ல் திருப்புவனம் டெப்போவில் பணியாற்றி, மாரடைப்பால் இறந்துவிட்டார். குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு முருகேஸ்வரிக்கு 3 மாதங்களுக்கு முன் தினக்கூலியாக நடத்துனராக நியமித்தனர். தினமும் ரூ.690 சம்பளத்தில் மாட்டுத்தாவணி டவுன் பஸ்சில் பணியாற்றினார்.
சமீபகாலமாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் தினக்கூலியில் பணியாற்றியோரை பணிநீக்கம் செய்ததில் முருகேஸ்வரி பணிவாய்ப்பை இழந்தார். அவர் கூறியதாவது: எனது தந்தை, சகோதரர் இருவரும் இறந்துவிட்டனர். தாய் வேலையின்றி வீட்டில் உள்ளார். எனது கணவரும் விலகிசென்றதால், இருகுழந்தைகளுடன் சிரமப்படுகிறேன். குடும்பச் சூழல் கருதி போக்குவரத்துக் கழகத்தில் பணிவாய்ப்பு தந்தனர். கருணை அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் விரைவில் நியமிப்பதாக கூறினர். தற்போது ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதால், தினக்கூலி அடிப்படையிலான எனது பணி முடிவுக்கு வந்துவிட்டது. எனக்கு கருணை அடிப்படையில் தினக்கூலி வாய்ப்பையாவது தந்து வாழ வழி செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ''அவுட்சோர்ஸிங் முறையில் பணிநியமனம் நடப்பதால் அதற்கு ரூ.20 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். அதற்கான சூழலும் தற்போது இல்லை எனத் தெரிகிறது. கருணை அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் சீனியாரிட்டி அடிப்படையில்தான் நியமிக்க முடியும் என்பதால் அதற்கும் காலதாமதம் ஆகும். இருப்பினும் அவருக்கு உதவ முடியுமா என பார்க்கிறோம்'' என்றனர்.