/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்த்தேக்க வழியில்லாத சாலிச்சந்தை கண்மாய்
/
நீர்த்தேக்க வழியில்லாத சாலிச்சந்தை கண்மாய்
ADDED : ஜன 16, 2025 05:21 AM

பேரையூர்: பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி ஒன்றியம் சாலிச்சந்தையில் அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழை நீர் கிளை ஓடைகளாகப் பிரிந்து சாலிச்சந்தை கண்மாயில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. கிளை ஓடை செல்லும் வரத்து கால்வாய்கள் பல காணாமல் போய்விட்டன. சில ஓடைகள் துார்ந்து போய் உள்ளன. இதனால் கண்மாயில் நீர் தேக்க முடியாத நிலை உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: ஒன்றிய நிர்வாகத்தில் உள்ள இந்தக் கண்மாய் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் உள்ளது. வரத்து கால்வாய்களும் துார்ந்து போனதால் கண்மாய்க்கு ஒருபோதும் நீர் வருவதில்லை என்றனர். கண்மாயை துார்வாரி நீர் தேக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

