/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திட்டம் போட்டு திருடும் கூட்டம்; 'சைபர்' குற்றவாளிகளில் 77 பேர் பட்டதாரிகளாம்
/
திட்டம் போட்டு திருடும் கூட்டம்; 'சைபர்' குற்றவாளிகளில் 77 பேர் பட்டதாரிகளாம்
திட்டம் போட்டு திருடும் கூட்டம்; 'சைபர்' குற்றவாளிகளில் 77 பேர் பட்டதாரிகளாம்
திட்டம் போட்டு திருடும் கூட்டம்; 'சைபர்' குற்றவாளிகளில் 77 பேர் பட்டதாரிகளாம்
ADDED : டிச 04, 2024 08:17 AM
மதுரை: மதுரையில் 2021 முதல் இந்தாண்டு நவம்பர் வரை சைபர் கிரைம் வழக்குகளில் 77 பட்டதாரிகள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டதாரிகளில் 25 பேர் பி.இ., எம்.பி.ஏ., படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச இணையவழி குற்றத்தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி., அரவிந்த் பேசியதாவது:
கல்வி உதவித்தொகை என்ற பெயரில் மாணவர்களை குறிவைத்து மோசடி நடக்கிறது. நமது அலைபேசி எண்ணை எங்கிருந்தோ பெற்று, நமது விபரங்களை அறிந்து கொண்டு 'தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதால் ஸ்காலர்ஷிப் பெற தகுதி பெற்றுவிட்டீர்கள்' எனக்கூறியும், உதவித்தொகை அனுப்ப நடைமுறை கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறியும் சில ஆயிரம் ரூபாய் பெற்றும் மோசடி செய்வது தொடர்கிறது. 'எந்த முயற்சியும் எடுக்காமல் எப்படி உதவித்தொகை கிடைக்கும்' என நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
கூடுதல் ஏ.டி.எஸ்.பி., கருப்பையா பேசியதாவது: 2021 முதல் இந்தாண்டு நவம்பர் வரை சைபர் கிரைம் வழக்குகளில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் பட்டதாரிகள். அவர்களில் 25 பேர் பி.இ., எம்.பி.ஏ., படித்தவர்கள். பணம் மோசடி மட்டும் சைபர் கிரைம் அல்ல. சமூக வலைத்தளத்தில் தேவையற்ற படங்களை 'அப்லோடு' செய்வது, பிறர் பாதிக்கும் வகையில் 'ரீல்ஸ்' வெளியிடுவதும் இக்குற்றங்களே. உதாரணமாக, 50 வயது பெண் குளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் 'அப்லோடு' செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரை விசாரித்தபோது, அப்பெண்ணின் தங்கை மகனான கல்லுாரி மாணவர் 'அப்லோடு' செய்தது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என அப்பெண் கூறினார். அதை நீதிமன்றத்தில் கூறுங்கள் எனத்தெரிவித்து மாணவனை கைது செய்தோம்.
மற்றொரு சம்பவத்தில் சட்டக்கல்லுாரி மாணவியர் 3 பேரை சக மாணவி ஒருவர் குரூப் போட்டோ எடுத்து 'நடுவில் உள்ள பெண்ணிடம் பேச ஆசையா. என்னை தொடர்பு கொண்டு 'ஜி பே' யில் பணம் அனுப்புங்கள்' எனக்கூறி சமூகவலைத்தளத்தில் 'அப்லோடு' செய்தார்.
பணம் அனுப்பியவருக்கு மாணவியின் அலைபேசி எண்ணை தந்தார். அந்த நபர் தினமும் இரவு போன் பேசி 'டார்ச்சர்' செய்தார். இப்புகாரையும் விசாரித்து சகமாணவியை பிடித்தோம்.
செமஸ்டர் தேர்வு இருந்ததால் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராகிறேன் என்றார். அவரது நலன்கருதி கைது செய்யாமல் அனுப்பினோம். ஒருமாதமாகியும் விசாரணைக்கு வராததால் வேறுவழியின்றி கைது செய்தோம் என்றார்.