/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்க முடியவே முடியாது! விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி
/
நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்க முடியவே முடியாது! விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி
நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்க முடியவே முடியாது! விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி
நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்க முடியவே முடியாது! விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி
ADDED : மார் 16, 2024 07:48 AM

மதுரை : ''எந்த பகுதியில் அறுவடை செய்தாலும் உடனடியாக நெல் கொள்முதல் மையம் அமைக்கப்படும். நெற்களத்தை வியாபாரிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் நிரந்தர மையம் அமைக்க முடியாது'' என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகர், துணை இயக்குநர் ராணி பங்கேற்றனர்.
கூட்ட விவாதம் வருமாறு:
புதுசுக்காம்பட்டி சாலமோன் மலையாளம்:
காங்கேயநத்தம் கண்மாய் செல்லும் வரத்துக் கால்வாயை சரிசெய்ய வேண்டும்.
நடுமுதலைக்குளம் ராமன்:
திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் பாசனம் பெறும் கண்மாய்களை சீரமைக்க வேண்டும்.
செயற்பொறியாளர் அன்புச்செல்வன்:
திருமங்கலம் பிரதான கால்வாயின் 5வது கிளை நீட்டிப்பு கால்வாயில் இருந்து காங்கேயநத்தம் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயை சரிசெய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது..
விடத்தக்குளம் நாராயணன்:
திருமங்கலம் எட்டுநாழி கண்மாய் மறுகால் செல்லும் ஓடையை ஆழப்படுத்த வேண்டும்.
திருமங்கலம் பி.டி.ஓ.,:
நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மதிப்பீடு தயார் செய்து வரத்து கால்வாய் சீர்செய்யப்படும்.
சிறுவாலை ஈஸ்வரி:
விவசாய பயன்பாட்டுக்கான நெல் உலர்த்தும் களத்தை மீட்டுத் தரவேண்டும்.
மதுரை மேற்கு பி.டி.ஓ.,:
வடக்கு தெருவில் உள்ள சிமென்ட் களம் பயனற்ற நிலையில் இருந்ததால் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தாண்டு புதிய திட்டத்தில் சிமென்ட் களம் அமைக்கப்பட உள்ளது.
புதுசுக்காம்பட்டி பாண்டி:
மேலுார் பெரியாறு வாய்க்கால் 11, 12வது மடை வாய்க்கால் ஆக்கிரமிப்பு பாலம் கட்டியதை அகற்ற வேண்டும்.
செயற்பொறியாளர் சிவப்பிரபாகர் :
களஆய்வு செய்து ரூ.2.2 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாசன கால்வாயின் குறுக்கே பாலம் கட்டினாலும் அது பொது பயன்பாட்டுக்கு மாற்றப்படும். தண்ணீர் செல்வதற்கு இடையூறில்லை.
உசிலம்பட்டி மணிகண்டன்:
நகர கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்ட பின் ஊழியர்களுக்கு ரூ.3.2 கோடி பணிக்கொடையை இதுவரை வழங்கவில்லை.
கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி:
தணிக்கை பணி முடிந்ததும் பணிக்கொடை உடனே விடுவிக்கப்படும்.
கள்வேலிப்பட்டி சந்திரன்:
ஜல்லிக்கட்டுக்காக பெரியாறு பாசன வாய்க்காலில் ரோடு, பாலம் அமைத்து வாய்க்காலை அழித்ததை மீண்டும் சரிசெய்ய வேண்டும்.
நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர்:
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்தை நிறுத்திய பின் வாய்க்கால் சரிசெய்யப்படும்.
நாட்டாபட்டி மணவாளக்கண்ணன்: திருமங்கலத்தில் நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.
கலெக்டர் சங்கீதா:
மனுவை விசாரிக்க ஒருமாதம் அவகாசம் தரப்பட்டுள்ளதால் வாய்க்கால், நீர்நிலை, நெற்கள ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு பி.டி.ஓ., தாசில்தார் உடனே நடவடிக்கை எடுத்து பதில் தரவேண்டும். நெல் எங்கெங்கு அறுவடையாகிறதோ அதற்கேற்ப கொள்முதல் மையம் அமைக்கப்படும். நிரந்தர மையம் அமைத்தால் வியாபாரிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் நிரந்தரமாக அமைக்க முடியாது.
//
பாக்ஸ் மேட்டர்...
---
விவசாயிகள் மோதல் அதிகாரிகள் குழப்பம்
குறைதீர் கூட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கே பேச வாய்ப்பளிப்பதாக மேலுார் விவசாயிகள் கூச்சலிட்டனர். மாதந்தோறும் நடக்கும் கூட்டத்தில் எல்லோருக்கும் பேச வாய்ப்பளிக்கவில்லை என்றனர். கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பழனிசாமி பேசுகையில், ''அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்ட பதிவு செய்து விட்டு வேறு ஆலைக்கு கொடுக்கின்றனர். அரசின் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. தவறான முன்னுதாரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார். இதுகுறித்து கரும்பு அரவைக்கான சிறப்பு அலுவலரிடம் கலெக்டர் சங்கீதா கேட்டபோது, ஊக்கத்தொகை குறித்து குழப்பமான பதில் அளித்தார். இதையடுத்து கமிஷனரிடம் தெளிவான பதில் பெறுமாறு கலெக்டர் கூறினார்.

