
வீடுகளுக்குள் கழிவுநீர்
ஆத்திகுளம் குறிஞ்சிநகர் மல்லிகைத் தெருவில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளதால் குடியிருப்போர் வெளியேறி உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை அடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.
- குமார், ஆத்திகுளம்
சாக்கடை அடைப்பை எடுங்க
மதுரை குலமங்கலம் மெயின் ரோடு கோசாகுளத்தில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் நிரம்பி ஆறாக ஓடுகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனே அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- கிருஷ்ணன், கோசாகுளம்
குண்டும் குழியுமான ரோடுகள்
கூடல்புதுார் - கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன் சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். பேவர் பிளாக் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வள்ளுவன், கூடல்புதுார்
மழைநீர் தேக்கம்
மதுரை அண்ணாநகர் சித்தி விநாயகர் கோயில் தெருவில் மழைநீர் ரோட்டில் தேங்குகிறது. மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். பாதாள சாக்கடை வசதி இருந்தும் முறையான வடிகால் இன்றி பல மாதங்களாக இந்நிலை நீடிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மனோரஞ்சிதம், அண்ணாநகர்
திரும்பிய தெருவிளக்கு
மதுரை கே.கே.நகர் டாக்டர் தங்கராஜ் சாலை 2வது குறுக்குத் தெருவில் மின்விளக்கு தெருவிற்கு வெளிச்சம் தராத வகையில் சுவரை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் ரோட்டில் போதிய வெளிச்சம் இன்றி வாகன ஓட்டிகள் இரவில் தடுமாறுகின்றனர். அதிகாரிகள் மின்விளக்கை சரிசெய்து தெருவுக்கு வெளிச்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கன்னிகாஸ்ரீ, கே.கே.நகர்
பாலத்தில் ஓட்டை
மதுரை 99 வது வார்டு பாலசுப்பிரமணிய நகர், 94 வது வார்டு திருநகர் காந்திஜி 7 வது தெருவை இணைக்கும் பாலம் பழுதடைந்துள்ளது. பாலத்தின் ஓரத்தில் ஏற்பட்டுள்ள 'மெகா' ஓட்டையை தென்னை ஓலையால் மறைத்துள்ளனர். பாதசாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து உடனே சரிசெய்ய வேண்டும்.
- முத்துக்குமாரசாமி, திருப்பரங்குன்றம்