
வடிகால் இல்லை
மதுரை மேலமடை ராஜா வீதியில் பல நாட்களாக ரோட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை வசதி இருந்தும் போதிய வடிகால் வசதி இல்லை. மாநகராட்சியில் புகார் அளித்தால் தற்காலிகமாக சரி செய்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் வடிகால் அமைத்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஐயப்பன், மேலமடை
'ஷாக்' அடிக்கும் கம்பம்
மதுரை காமராஜர் ரோடு ஆவின் பூத் 358 அருகே போக்குவரத்து போலீசாரால் வைத்துள்ள ஒலிபெருக்கி கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் மீது உரசுகிறது. பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- யோகராஜ், முனிச்சாலை
குப்பையை அகற்றுங்கள்
மதுரை காமராஜர் ரோடு நியூ பங்கஜம் காலனி குடியிருப்பில் குப்பை தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. தெரு முழுதும் குப்பை சிதறி துர்நாற்றம் வீசுவதோடு எலிகளின் புகலிடமாக உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குப்பையில் அடிக்கடி தீப்பற்றி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாந்தினி, காமராஜர் ரோடு
சாக்கடை நிரம்பியது
மதுரை எல்லீஸ் நகர் சர்வோதயா மெயின் ரோடு முதல் குறுக்குத் தெருவில் 15 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் தேங்கியுள்ளது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று அபாயம் உள்ளது. மாநகராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனே சரி செய்ய வேண்டும்.
- வினோத், எல்லீஸ் நகர்
டெங்கு அபாயம்
சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு பாலமுருகன் நகரில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி பெருகி டெங்கு பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தி சுகாதாரப் பணிகளை மேம்படுத்த வேண்டும்.
- ஆனந்த குமார், சோழவந்தான்
இருட்டால் திருட்டு
மதுரை எல்லீஸ் நகர் முதல், 2வது மெயின் தெருக்களில் மட்டும் தெருவிளக்குகள் எரிகின்றன. குறுக்குத் தெருக்களில் ஒரு விளக்கு கூட ஒளிரவில்லை. இரவில் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுவதால், இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து தெரு விளக்குகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சூர்யா, எல்லீஸ் நகர்
வீடுமுன் சாக்கடை
மதுரை எஸ்.எஸ்.காலனி கண்ணதாசன் முதல் தெருவில் ஒரு மாதமாக கழிவுநீர் நிரம்பி வீட்டு வாசல் முன் தேங்கியுள்ளது. புகார் செய்தபின் பணியாளர்கள் வந்து பார்த்தும் அடைப்பை சரி செய்ய முடியவில்லை என கைவிரித்து விட்டனர். நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உடனே சாக்கடை அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அமுதா, எஸ்.எஸ்.காலனி