
வேகத்தடையால் அவதி
தெற்கு வாசல் போலீஸ் ஸ்டேஷன் அருகே மோசமான நிலையில் வேகத்தடை உள்ளது. ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் நெரிசல் ஏற்பட்டு அப்பகுதி சிக்னல் வரை வரிசையில் காத்திருக்கும் நிலையுள்ளது. வேகத்தடையை அகற்றி ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், தெற்கு வாசல்
ஆக்கிரமித்து வியாபாரம்
73 வது வார்டு டி.வி.எஸ்., நகரில் தள்ளுவண்டிகளில் வடை, பருத்திப்பால், ஐஸ்கிரீம் போன்றவற்றை சுகாதாரமற்ற முறையில் விற்பதுடன், போக்குவரத்திற்கு இடையூறாக வண்டிகளை நிறுத்தி கல்லா கட்டுகின்றனர். சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலா, டி.வி.எஸ்., நகர்
வீணாகும் தண்ணீர்
ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை உள்ளது. குடிநீர் திட்டப் பணிக்காக தடுப்பணையை உடைத்து குழாய் பதிக்கும் பணி நடந்தது. பணி முடிந்தும் தடுப்பணையை சீரமைக்கவில்லை. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. தடுப்பணையை உடனே சீரமைக்க வேண்டும்.
- குணசேகரன், பெத்தானியாபுரம்
தெருவிளக்கு தேவை
சர்வேயர் காலனி - மாட்டுத்தாவணி வரையான 120 அடி ரோட்டின் இருபுறமும் போதுமான தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது. இரவில் வழிப்பறி, விபத்துகள் நடக்கின்றன. கே. புதுார் முதல் சர்வேயர் காலனி ரோட்டிலும் போதிய விளக்குகள் இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் தெருவிளக்குகளை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், சர்வேயர் காலனி
பாதாள சாக்கடை அடைப்பு
அரசரடியில் இருந்து ஹார்வி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. துர்நாற்றத்துடன் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- ராகேஷ், ஹார்வி நகர்

